நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அறிவித்திருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹட்டன் குப்பை விவகாரத்தில் மக்களுக்கு சேவை செய்ய முன்வராத நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி தமக்குத் தேவையில்லை என்று ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ஹட்டன் நகரில் குப்பை கொட்டுவது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இதய சுத்தியுடனேயே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. எனினும், அரசியல் சுயலாபம் தேடும் அரசியல் பிணாமிகளால் அதன் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்பட்டது. ஆனால் பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் இ.தொ.கா. இதனால் ஓய்ந்து போகவில்லை.
பத்தனைப் பகுதியில் குப்பைகளைப்போட வேண்டாம் என அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் ஒரு சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்தியதினால், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதே இ.தொ.கா. வின் தலையாய கடமையாகும் எனக்கருதி இ.தொ.கா. விற்குச் சொந்தமான கொட்டகலை காங்கிரஸ் வளாகத்தின் ஒதுக்குப்புறத்தில் அந்த குப்பைகளை குழிதோண்டிப் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இ.தொ.கா. மீதும், அதன் பொதுச் செயலாளர் மீதும் மலையக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாதபடி நிரூபித்துக் காட்டுவதே இ.தொ.கா. வின் நிலைப்பாடாகும்.
அநாகரிகமான முறையில் அரசியலை நடத்துவதற்கு இ.தொ.கா. ஒருபோதும் விரும்பாது. ஆகவேதான் மக்களுக்கு சேவை செய்ய முன்வராத நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைமைப் பதவி தேவையற்றதாகும் எனக் கருதி இ.தொ.கா. வின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தமது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைமைப் பதவிக்கான இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.