Breaking
Sun. Nov 24th, 2024

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பொதுபல சேனாவையும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரையும் பாதுகாப்பது மஹிந்த ராஜபக்ஷவே என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக கூறியிருப்பது முழுப் பூஷணிக்காயையும் சோற்றில் மறைப்பது போன்ற கதையாகும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அவர் தெரிவித்தார்.

நேற்று (14) கொழும்பில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி  செய்தியாளர் மாநாட்டின் போது,  ஞானசார தேரர் தொடர்பாக அமைச்சர் சம்பிக தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளித்தே  அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

பொதுபலசேனா அவரது கட்சியோடு இணைந்து வளர்ந்தது என்று அமைச்சர் சம்பிகவே ஒப்புக் கொள்கின்றார். அப்படியென்றால் பெற்ற தாயை பிள்ளை மறந்து விடுமா?  எனினும் இன்று ஒரு பெரும் இக்கட்டான ஒரு நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

பொதுபல சேனாவின் அட்டகாசத்தை முறியடிப்பதற்கு  அதனை தடைசெய்ய வேண்டுமென அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் அமைச்சரவையில் முன்யோசனை சமர்ப்பித்தார். துள்ளி எழுந்த சம்பிக எதிர்த்தார். அப்படிச் செய்தால் இந்த நாட்டிலே மகாசங்கம் வீதியில் இறங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அவ்வேளையிலே அதற்குச் சார்பாகப் பேசியவர் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன என்பதையும் பேருவளை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

அளுத்கமை சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது குறித்து அவருடைய இணையத்தளங்களிலும் செய்தியை வெளியிட்டுள்ளார். இப்படியிருக்க இப்பொழுது விடயம் முற்றி,  இந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களே தங்களுடைய குமுறலை வெளிப்படுத்த முடியாமல் வெளிநாட்டு தூதுவர்கள் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து என்று தற்போது காவடி செல்கின்றனர். இறுதியாக முஸ்லிம்களுக்கு விளைகின்ற இன்னல்கள் பற்றி அவர்கள் சொல்லவிருப்பது இங்கிலாந்து மகாராணி  எலிசபெத் மகாராணியிடம் மட்டும்தான். எனவே முஸ்லிம் மக்கள் இப்போது உண்மையை உணர்ந்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கில் இன்று மஹிந்த ராஜபக்ஷவை நாடி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்களையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதியிடம் வேண்டுவதற்கு நான்கு முறை எத்தனித்தும் அது முடியவில்லை என முஸ்லிம் அமைச்சர்களே  கூறுகின்றார்கள். அது மட்டுமல்ல, பொலிஸாரிடம் செய்யும் முறைப்பாடுகளை அவர்கள் நொண்டிச்சாட்டு சொல்லி தட்டிக் கழிக்கின்றார்கள். அது மின் ஒழுக்கு என்று சொல்கின்றார்கள். ஆனால் நாம் சொல்வது இந்த மின் ஒழுக்கு வெகுசீக்கிரத்தில்  இந்த அரசாங்கத்தைத் தாவும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது.

எனவே பாடலி சம்பிக அமைச்சரினுடைய கடந்த கால நடவடிக்கைகளைக் கவனிக்கும் போது இஸ்லாமிய  ஷரீஆ சட்டத்தை முற்று முழுதாகக் கண்டித்து ஒரு நூல் எழுதியவர் அவர். சென்ற தேர்தல் காலத்தின்போது இந்த நூலை நான் பகிரங்கமாக துண்டுதுண்டாக ஊடகங்களுக்கு முன் கிழித்தெறிந்தேன் என்பதை எமது சமுதாயத்துக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

இது இவ்வாறு இருக்க, பாதுகாப்புச் செயலாளர் ஹெட்டியாராய்ச்சி முஸ்லிம் கடைகள் தீ வைப்பது  பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறுகின்றார். அதாவது முஸ்லிம் சமுதாயம் செத்தாலும் பரவாயில்லை என்பதுதான் இதன் அர்த்தப்படுகின்றது.

அது மட்டுமல்ல, நடக்கின்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் தேவையில்லை என்று கூறுகின்றார். ஆனால் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் இராணுவத்தைக் கொண்டாவது கட்டுப்படுத்துங்கள் என்று சொன்னவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஆகவே அரசாங்கத்தின் மேல் இடத்தில் இருந்தே நடக்கின்ற விடயங்களைத் தட்டிக் கழித்து முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற விதத்தில் அவர்கள் நடந்து கொள்கின்றார்கள். இது குறித்து முஸ்லிம்கள் இன்று மிகவும் கவலையடைந்து ஆக்ரோசமடைந்திருக்கின்றார்கள்.  ஆனால் அவர்கள் வெகுண்டு எழும்பும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு நாங்கள் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

இவை அத்தனையும் பார்க்கும் போது பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரை ஒழித்து வைத்திருப்பவர், பேராசிரியர் திஸ்ஸ விதானக கூறியது போன்று சம்பிக அமைச்சரும் இன்னொரு அமைச்சரும் என்பதை நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

சுமார் 16 சம்பவங்கள் நடந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கூறியிருக்கின்றார். முஸ்லிம் முற்போக்கு முன்னணியிடம் இருக்கின்ற தகவலின்படி 106 முஸ்லிம்களுக்கு விரோதமான தாக்குதல் சம்பவங்கள் இந்த அரசாங்கம் வந்த நாளிலிருந்து நடைபெற்றதாக பதிவாகியுள்ளன என்பதனையும் நாங்கள் நிரூபிக்கத் தயாராக இருக்கின்றோம்- என்றும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *