ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி “வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இருவரும் நாளை மதியத்திற்குள் தாமாகவே பதவி விலகக் கோருகின்றேன்”. என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்துள்ளார்.
மேலும், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இருவர் மீதும் விசாரணைகள் நடத்தப்படும். அதுவரை விடுமுறையில் செல்ல வேண்டும், இவர்கள் தங்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி ஓய்வில் இருக்கவேண்டும், அவர்களின் அமைச்சு பொறுப்புக்களை நான் பார்த்துக் கொள்வேன் எனவும் முதலமைச்சர் தனது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் தீர்மானத்தின் பின்னர் வடமாகாண சபையின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.