வடக்கு – கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக இரண்டு இலட்சத்து 44 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வறட்சி நிலவரம் தொடர்பாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, வட மாகாணத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, 54 சதவீதமானவர்கள் வட மாகாணத்திலே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களிலும் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 931 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்திலே கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு. திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் 55 ஆயிரத்து 249 குடும்பங்களை கொண்ட ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்திலே கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, பிபிசி செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை கொண்ட வட மேல் மாகாணத்தில் 82 ஆயிரத்து 536 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 80 ஆயிரத்து 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
வட மத்திய மாகாணம் அனுராதபுர மாவட்டத்திலும் 4 ஆயிரத்து 344 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் அந்த இடங்கள் இனம் காணப்பட்டு தண்ணீர் பம்புகள் மூலம் குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.