(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)
ஈரானுடனான யுத்தத்தில் தனக்கு முழு ஆதரவு வழங்கியது போன்று குவைத் விடயத்திலும் அமெரிக்கா தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றே சதாம் ஹுசைன் நம்பினார். ஆனால் இது தன்னை அழிப்பதற்கான வலைவிரிப்பு என்பதனை பின்புதான் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
குவைத் நாட்டை ஈராக் இராணுவம் முழுமையாக கைப்பேற்றியதும், ஈராக்கினை சுற்றியுள்ள அரபு நாடுகள் உற்பட உலக நாடுகள் ஈராக்குக்கு எதிராக பொருளாதார தடையை விதித்தது, ஈராக் தனிமைப்படுத்தப் பட்டதுடன், அமெரிக்காவினதும், அதன் நேசநாடுகளினதும் முப்படைகள் இராணுவ தளபாடங்களுடன் மத்திய கிழக்கை நோக்கி விரைந்தன.
ஈராக்குக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்காக அமெரிக்கா தலைமையிலான சுமார் முப்பத்தைந்து நாடுகள் மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளில் தளம் அமைத்துக்கொண்டு ஈராக்குக்கு எதிராக போர் தொடுத்தது.
சகோதர இஸ்லாமிய நாட்டை அழிப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான இஸ்லாமிய விரோதிகளுக்கு இராணுவ தளம் அமைப்பதற்கு இடம் வழங்கிய நாடுகளில் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் முன்னிலை வகித்தன. அதில் மத்திய கிழக்கிலேயே அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளம் இப்போதும் கத்தார் நாட்டில் காணப்படுகின்றது.
1991 இன் வளைகுடா யுத்தத்தில் குவைத்திலிருந்து ஈராக் பின்வாங்கியதுடன், நீண்டகால மிகவும் இறுக்கமான பொருளாதார தடையினை எதிர்கொண்டதனால் ஈராக் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. இருந்தும் சதாம் ஹுசைன் என்னும் இரும்பு மனிதரை கொலை செய்யவோ, ஆட்சியை விட்டு அகற்றவோ, அவரது இராணுவ பலத்தை அழிக்கவோ முடியவில்லை. என்ற ஆதங்கம் அரபு நாடுகளிடம் காணப்பட்டது.
அதனால் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை சிதைத்து அந்த நாட்டினை அழித்ததன் பின்பு, ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக வேண்டுமென்று சோடிக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மீண்டும் 2௦௦3 ஆம் ஆண்டு ஈராக்குக்கு எதிராக அர்த்தமில்லாத இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா தலைமையிலான இந்த இராணுவ நடவடிக்கைக்கு சவூதி, கத்தார் உற்பட பெரும்பாலான அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை புரிந்தது. இன்றும் யாராலும் நிறுத்த முடியாத கொடூர கொலைக்களமாக ஈராக் காட்சி தருகின்றது. இன்றுவரைக்கும் பல இலட்சம் இஸ்லாமியர்கள் ஈராக்கிலே மரணித்துள்ளார்கள்.
ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முடிவில்லா கொலைக் களத்தினை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்? சவூதி, கத்தார் போன்ற அரபு நாடுகள் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு இராணுவ தளம் அமைப்பதற்கு இடம் வழங்க மறுத்திருந்தால், மத்திய கிழக்கில் இன்றைய அவல நிலைமை ஏற்பட்டிருக்குமா?
காலப்போக்கில் கத்தார் நாட்டின் கொள்கைகளில் சில மாற்றங்கள் தென்பட்டதாக கூறப்படுகின்றது. அதாவது மறைமுகமாக சில இஸ்லாமிய முற்போக்கு இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கினாலும், வெளிப்படையாக அமெரிக்காவின் அடிமைத்தனத்திலிருந்து கத்தார் நாடு விடுபடவில்லை.
ஹமாஸ் இயக்கத்துக்கு முழுமையான நிதி உதவிகளை செய்து வருவதுடன், இறுதியாக காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் சேதமடைந்த காசாவின் புனரமைப்புக்கு கத்தார் பூரண நிதியுதவிகளை வழங்கியது.
மற்றும் எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கும் கத்தார் உதவி புரிந்து வருகின்றது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் ஆத்திரத்தினை உண்டு பண்ணியதனால், அமெரிக்காவை திருப்தி படுத்தும் பொருட்டு சவூதி தலைமையிலான நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியதாக ஊகிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய வரலாற்றினை நோக்குவோமானால், ரோம சாம்ராஜ்யமும், பாரசீக சாம்ராஜ்யமும் உலகில் யாராலும் அசைக்க முடியாத இரு பேரரசுகளாக காணப்பட்டது. உலகின் பெரும்பாலான பிரதேசங்கள் இப்பேரரசுகளின் சிற்றரசுக்கலாக செயற்பட்டது. இந்த ரோம, பாரசீக பேரரசுகளை உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் போர் தொடுத்து நிர்மூலமாக்கியதுடன், அப்பிராந்தியங்களில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள்.
தொடரும்………….