கட்டார் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை பலப்படுத்துவதற்கு ஓர் முஸ்லிம் அமைச்சர் மூலம் நிதி உதவி வழங்கி வருகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் முறையிட்டு வந்தமை இன்று உறுதியாகி விட்டது.
கட்டாரிலிருந்து பெறப்பட்ட பணம் தீவிரவாதத்துக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே தெரிவித்தார்.
நேற்று ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் ஜனாதிபதிக்கு கட்டாரியிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் கிடைத்து வரும் நிதி உதவி பற்றி விளக்கமாக கடிதம் ஒன்று எழுதியிருந்தோம்.
வில்பத்து குடியேற்றங்கள் பற்றி முறையிட்டிருந்தோம்.
இந்த நிதியுதவி உடன்படிக்கையில் அரசாங்கம் கையொப்பமிடவில்லை. நிதியுதவி அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படவுமில்லை. வில்பத்துவுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரே கையொப்பமிட்டார்.
அந்த அமைச்சர் மஹிந்தராஜபக் ஷ காலத்தில் வகித்த அதே அமைச்சுப் பதவியையே தற்போதைய அரசிலும் வகிக்கிறார்.
கட்டார் உலக இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது. நிதியுதவிகளை வழங்கி வருகிறது என்பது இப்போது உறுதியாகி விட்டது என்றார்.