(ஊடகப்பிரிவு)
வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க்கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, எங்களிடத்தில் கூறவேண்டும்.
பாராளுமன்றத்தில் நேற்று (06.06.2017) தினேஷ் குணவர்த்தன எம்.பி முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு எதிரான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்தார்.
அவர் உரையாற்றிய போது கூறியதாவது,
30வருடகால யுத்தம் முடிவடைந்து சர்வதேசமட்டம் வரை உள்நாட்டு பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர் நம் நாட்டில் அரசியல் அமைப்பு சபை ஒன்று உருவாக்கப்பட்டு, தீர்வு முயற்சிகளுக்காக எல்லா கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்றது.
அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் கருதியும் அரசியல் வாதிகள் தங்களது எழுச்சி, இருப்பு மற்றும் சொந்த நலன்களை முன்நிறுத்தியும் செயற்பட்டதனாலேயே இந்த நாடு அழிவுப்பாதைக்கு சென்றது.
அத்துடன் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விட்ட தவறுகளினால் இந்த நாட்டிலே இரத்த ஆறு பெருக்கெடுத்தது. சொத்துக்கள் அழிக்கப்பட்டன. மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. ஊனமுற்றோர் அதிகரித்தனர்.
இந்த உயர் சபையிலே எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஐயாவும், அவரது கட்சியை சார்ந்த சுமந்திரன் எம்பியும் வீற்றிருக்கும் போது, நான் ஒரு விடயத்தை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
புலிகளினால் வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் 25வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேற செல்லும் போது உங்கள் கட்சியைச் சார்ந்த ஒரு சிலர் அவர்களின் மீள்குடியேற்றத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்த்து வருகின்றனர். முல்லைத்தீவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை அப்பட்டமாக இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அந்த பிரதேச முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்காக வீடுகளை அமைக்கவென மீள்குடியேற்ற செயலணி மூலம் நிதி ஒதுக்கப்பட்ட போது அதற்கு அனுமதிக்க முடியாது என்று உங்கள் கட்சியைச்சார்ந்த ஒரு சிலர் அடம்பிடித்துள்ளனர். மாகாண சபை உறுப்பினர் ஒருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து இந்த எதிர்ப்பை வெளிகாட்டி இருப்பது வெட்கமாக இருக்கின்றது.எனியும் நாங்கள் இந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் மிகவும் திறந்த மனதுடனும், உறுதியாகவும் இருக்கின்றோம் என்பதை இந்த உயர் சபையிலே உங்களுக்க கூறி வைக்க விரும்புகின்றோம்.
மீள்குடியேற்ற விடயம் தொடர்பில் உங்களின் ஒத்துழைப்பை கோரும் வகையில் உங்கள் அலுவலகத்திற்கு வந்து கடிதம் ஒன்றை கையளித்தேன். எதிர்க் கட்சி தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி, உங்களுக்கு இருக்கின்ற அரசியல் பலம் மற்றும் உங்களது கட்சியின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட வடமாகாணசபையின் அதிகாரப் பலம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றத்திற்கு நீங்கள் உதவவேண்டும். இல்லையென்றால் ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிடுங்கள்.
எதிர்க் கட்சி தலைவரான உங்கள் மீது, நாங்கள் இன்னுமே நம்பிக்கை கொண்டுள்ளோம். அதனால் தான் நேரடியாக உங்கள் அறைக்கு வந்து அந்த கடிதத்தை கையளித்தேன்.
இதைப்போன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கடிதம் அனுப்பியிருக்கின்றேன். முன்னரும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டுமென கடிதம் அனுப்பியிருந்தேன். இற்றை வரையில் ஏந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
எனவே, வடக்கு முஸ்லிம்களின் மிள்குடியேற்றத்தில் மனச்சாட்சியுடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்வீர்கள் என நாங்கள் இன்னுமே நம்புகின்றோம். இவ்வாறு அமைச்சர் ரிஷாட் கூறினார்.