Breaking
Mon. Nov 25th, 2024

இயற்கை மனிதனுக்கு இயல்பாகவே பல படிப்பினைகளை வழங்குகின்றது. அவற்றை மனிதன் கற்றுக் கொள்ளத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் கண்டிப்பான முறையில் சில பாடங்களை நடாத்துகின்றது.   

இயற்கை அனர்த்தங்களையும் அவ்வாறே பார்க்க வேண்டியிருக்கின்றது. இலங்கையில் அரசியல் வேற்றுமைகளும் இன ரீதியான வேற்றுமைகளும் வேரூன்றி இருக்கத்தக்கதாக, இந்த நாடு சிங்களவர்களுக்கு உரியது என்றும் தமிழர்களும் முஸ்லிம்களும் வந்தேறுகுடிகள் என்றும் கடும்போக்குச் சக்திகள், பிரசாரம் செய்து கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களின் இன, மத அடையாளங்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தமானது, எல்லா வேற்றுமைகளையும் சமன் செய்து, இயற்கையின் பார்வையில் எல்லா மக்களும் சரி சமமானவர்களே என்ற செய்தியைச் சொல்லாமல் சொல்லியுள்ளது.


இப்படியான அனர்த்த சூழ்நிலைகளில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதைப் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமன்றி, நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

சகோதர இன மக்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால், கடும்போக்கு இயக்கங்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும் மூவினங்களைச் சேர்ந்த சாதாரண மக்களும் சமூகநல அமைப்புகளும் தன்னார்வப் பணியாளர்களும் களத்துக்கு ஓடோடி வருகின்றார்கள்.

அவ்வாறு வருவோரிலும் இன ரீதியான பாகுபாடு பார்க்கும் இரண்டொரு பேர் இருக்கலாம். என்றாலும் தன்னார்வமாக நிவாரணப் பணிகளில் களமிறங்கும் தரப்பினர் யாருமே, பொதுவாக இனப் பாகுபாடு பார்ப்பவர்களாக இருப்பதில்லை.

இவ்வாறான, இக்கட்டான சந்தர்ப்பங்களில் மக்களுடன் மக்களாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றுகின்ற அரசியல் பிரதிநிதிகள், மக்கள் மனங்களில் இடம்பிடித்து வருகின்றனர். ஆனால், இவ்வாறானவர்கள் நமது நாட்டில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

அந்தவகையில், கடந்தவாரம் நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப் பெருக்கு மற்றும் அதனோடிணைந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்கின்ற ஓரிரு அரசியல்வாதிகள், நாடு முழுவதும் வாழும் மக்களின் கவனிப்பைப் பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாக, பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும வெள்ள நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற விதம், மக்கள் மனங்களில் வெகுவாக இடம்பிடித்திருக்கின்றது.

தெவரப்பெரும ஒரு சாதாரண பொதுமகனைப் போல, களப்பணி ஆற்றுகின்றமையும் அவரது நடையுடை பாவனையும் செயற்பாடுகளும் சமூக வலைத்தளங்களில் கடந்த ஓரிரு நாட்களாகப் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

இலங்கையில் எத்தனையோ அனர்த்தங்களை நாம் சந்தித்திருக்கின்றோம். பல அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதையும் நாமறிவோம். அப்போதெல்லாம் மக்களோடு மக்களாக நின்ற ஒருசிலரின் வரிசையிலேயே, இப்போது இவரும் நோக்கப்படுகின்றார் எனலாம்.

நாட்டின் தென், சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் என்றுமில்லாத வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் 200 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அதேநேரம், ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்களும் அவர்களுடைய பெறுமதியான சொத்துகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், அரசாங்கம், முப்படையினர், தன்னார்வப் பணியாளர்கள், தொண்டு அமைப்புகள், வெளிநாடுகள் பல உதவிகளைச் செய்திருக்கின்றன. இதேவேளை, பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் களத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், தம்மாலான உதவிகளையும் செய்திருக்கின்றார்கள்.

பல மக்கள் பிரதிநிதிகள், அரசாங்கமோ வேறு யாரோ திரட்டிக் கொடுத்த பொருட்களுடன் பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றிருக்கின்றனர். ஒரு சிலரே தமது சொந்தச் சட்டைப் பையில் இருந்து செலவு செய்து நிவாரணங்களை வழங்கியிருக்கின்றனர். விரல்விட்டு எண்ணக் கூடிய ஓரிருவர் மாத்திரமே மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுள் பாலித தெவரப்பெருமவும் ஒருவர்.

மேலோட்டமாகப் பார்க்கின்றபோது, இந்த அனர்த்தத்தினால் சிங்கள மக்களே அதிகளவாக பாதிக்கப்பட்டதாக தோன்றுகின்ற போதிலும், கணிசமான தமிழ், முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே கள நிதர்சனம்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ள மூன்று மாகாணங்களிலும் உள்ள தேர்தல் தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் சிலர் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர்.

ஆனால், மக்களோடு மக்களாக எத்தனை பேர் களத்தில் நின்று வேலை செய்கின்றார்கள் என்றால், அதற்கு விடை ஒன்று அல்லது இரண்டு என்றுதான் வரும். குறிப்பாக, எத்தனை முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் அங்கு சென்று, பிரதியமைச்சர் பாலித போன்று, களத்தில் நிற்கின்றார்கள் என்று கேட்டால், அதற்குப் பதில் கிடைப்பதே கடினம்.

அதேபோன்று, இப்பகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எத்தனை சிங்கள அமைச்சர்கள் மக்கள் சேவையில் தம்மை அர்ப்பணித்து நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால், அதற்கான விடையையும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

பொறுப்பு வாய்ந்தவர்களும் இப்பிரதேச மக்களின் ஆணையைப் பெற்ற அரசியல்வாதிகளும் கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து கொண்டு, பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்திக் கொண்டிருக்க, சிலர் எட்டிக்கூட பார்க்காமல் இருக்கத்தக்கதாக, பாலித தெவரப்பெரும போன்ற ஓரிரு
எம்.பிக்கள் களத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கின்றார்.

குறிப்பாக, பிரதியமைச்சரான பாலித, தனது தராதரத்தைப் பாராது, ஓர் அடிமட்டப் பொதுமகனைப் போல, பணியாற்றுகின்றமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெள்ள அனர்த்தத்தைப் பார்வையிடுவதற்கு வந்த சில அரசியல்வாதிகள் காலில் சாதாரண செருப்பு அணிந்திருந்தார்கள். வெள்ளத்தில் இறங்கத் தயாராக வந்திருந்தார்கள்.

ஆனால், இன்னும் சிலர் காலில் சப்பாத்து அணிந்திருந்தனர். அதாவது உப்புக்குச்சப்பாக அல்லது தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கண்காட்சி பார்ப்பதுபோல, வந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது.

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை இவ்விடயத்தில் பாராட்டியே ஆகவேண்டும். அவர் வெறும் காலுடன் சாறத்தை மடித்துக் கட்டிக் கொண்டு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுகின்றார். படகுகளில் பயணித்து, மக்களைக் காப்பாற்றி வருகின்றார். களத்தில் நின்றுகொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு காரியமாற்றுகின்றார்.

இவையெல்லாம், இன்று சமூக வலைத்தளங்களில் வெகுவாக சிலாகித்துப் பேசப்படுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான ‘பாலித தேவப்பெரும’க்கள் யாருள்ளனர்? என்ற நியாயமான கேள்வி, இப்போது முன்வைக்கப்படுகின்றது.

முஸ்லிம் சமூக அரசியலில், தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டும், அமைச்சர்கள், எம்.பிக்கள் என்ற பந்தாவோடும் இருக்கின்ற எத்தனை மக்கள் பிரதிநிதிகள் இவரைப் போல, மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்றபோது, களத்துக்கு வருகின்றார்கள் என்று சிந்தித்தால்…. தலைசுற்றுகின்றது.

வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள், சுனாமி அனர்த்தம், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற எத்தனையோ அனர்த்தங்களையும் சிவில் சமூகப் பிரச்சினைகளையும் இதற்கு முன்னர் சந்தித்திருக்கின்றார்கள்.

ஆனால், இவ்வாறான சந்தர்ப்பங்களில் களத்துக்கு வந்து முழுமையாகத் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மிகக் குறைவானவர்களே.

பெரிய முஸ்லிம் கட்சிகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள், மற்றும் அதன் உறுப்பினர்களிடத்தில் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களைச் சந்திப்பதற்கான, ஒரு முறையான, கிரமமான ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

மக்களின் பிரச்சினைகளை, அவர்களது காலடிக்குச் சென்று கேட்டறிவதற்கான எந்த விருப்பமும் 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அவ்வாறு, கேட்டறியப்படும் குறைபாடுகளுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படுவதில்லை.

முஸ்லிம் மக்கள் ஓர் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுகின்றபோது, ‘ரோம் நகரம் எரிந்து கொண்டிருந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன்’ போல, வேறு காரியங்களில் மூழ்கிக்கிடக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நம்மிடையே உள்ளனர்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒரு தொலைபேசி அழைப்பின் ஊடாக, முஸ்லிம் எம்.பிக்களைத் தொடர்புகொள்வது குதிரைக் கொம்புக்கு ஒப்பானது. பல முஸ்லிம் அரசியல்வாதிகள், எல்லாம் நடந்து முடிந்த பின்னர், பொய் மூட்டைகளோடு மக்களிடையே வந்து, காரணங்களைச் சொல்லி விட்டுப் போவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இலட்சணத்தில், முஸ்லிம் சமூகத்தில் மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிபோல, தனது உணவு, தூக்கம், உடை எல்லாவற்றையும் தியாகம் செய்து, கடைசிவரையும் களத்தில் நின்று பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகளை இனித்தான் மக்கள் சிருஷ்டிக்க வேண்டியுள்ளது.

களுத்துறை மாவட்ட எம்.பியும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் செயற்பாடுகளால் அவருக்கு எதிர்காலத்தில் அரசியல் ஆதாயம் கிடைக்குமென்றாலும் அதையும் தாண்டிய மனிதாபிமான செயற்பாடுகளை, அவர் மேற்கொள்வது இது முதற்தடவையல்ல.

இதற்கு முன்னர், அளுத்கம மற்றும் பேருவளை கலவரம் வெடித்தபோது, சில முஸ்லிம் அரசியல்வாதிகளே நாலுபக்கமும் பார்த்துவிட்டுத்தான் களத்துக்கு போனார்கள்.
ஆனால் பாலித, கணிசமான முஸ்லிம்களைக் காப்பாற்றியது மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கு சார்பாகவும் இனவாதத்துக்கு எதிராகவும் பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்.
இதற்காகச் சிங்களக் காடையர்கள், அவரை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தினர். இவ்வாறு, தான் சாராத இனத்துக்காகக் குரல் கொடுக்கும் பழக்கம் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மிகக் குறைவாகும்.   
அந்த விடயத்தில் முன்மாதிரியாகச் செயற்பட்ட தெவரப்பெரும எம்.பி, இப்போது வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகளிலும் பேதங்கள் கடந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது ஏனைய முஸ்லிம், சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்பதை மறுப்பதற்கில்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தம்மை ‘ஹீரோ’க்களாக நினைத்து, இறுமாப்புடன் இருக்கின்றனர். ஆனால் பலர், மக்கள் சேவை விடயத்தில் ‘சீரோ’க்களாகவும் மக்கள் நலன்சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வில்லன்களாகவும் இருக்கின்றமை நீண்டகாலமாகவே அவதானிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் காலத்தில் ‘எங்கவீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர்.’ மாதிரி இருக்கின்ற முஸ்லிம் எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்றபோது, ‘மாடிவீட்டு மைனர்’கள் போல எட்டாத உயரத்துக்குச் சென்று விடுவது வாடிக்கையானது. முஸ்லிம்கள் சிவில், சமூக, அரசியல் மற்றும் இனவாத நெருக்கடிகளைச் சந்திக்கின்றபோது, தமக்கிருக்கின்ற சிங்கள வாக்குகள் குறைந்து விடக் கூடாது என்றும், அரசாங்கத்தில் வகிக்கும் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், நமக்கு ஏன் இந்த வம்பு என்றும் எண்ணுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர்.  பாலித தெவரப்பெரும, ஜே.வி.பியின் அநுர குமார திசாநாயக்க போல, இனங்களுக்கு அப்பால் நின்று, செயற்படக் கூடிய தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காண்பது அரிது.   

அப்படி யாராவது செயற்பட்டால், அதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் இருக்கும். அதேபோன்று, முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்ற வேளையில் தமது சுயகௌரவம், பதவி, தன்னிலை எல்லாவற்றையும் துறந்து, மக்களுக்காக மக்களோடு செயற்படுகின்ற தன்மையுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளைக் காண முடியவில்லை.

அல்லது அவ்வாறானவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

எனவே, முஸ்லிம்களின் அரசியலில், மேலிருந்து கீழ் நோக்கிய அரசியலில் இருந்து விடுபட்டு, கீழிருந்து மேலான அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவம் என்பதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதையும் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே இத்தனை சுகபோகங்களும் தமக்கு வழங்கப்படுகின்றன என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து, யாருடைய தனிப்பட்ட திறமைக்காக மட்டும் எம்.பி, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பதை ஜீரணிக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், மேட்டுக்குடி அரசியலில் இருந்து இறங்கி வந்து, மக்களோடு மக்களாகச் சேவையாற்ற வேண்டும். மக்களுக்குத் துன்பம் நேர்கையில் அவர்களது காலடியில் நிற்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது ஏற்படுகின்ற நல்லெண்ணமும் மதிப்பும் எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.     

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *