சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணப் பணிகளை அள்ளி வழங்கினார்.
மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு இதன்போது விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அப்பகுதி மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை அங்குள்ள சமூக நிறுவனங்களிடம் ஒப்படைத்தார்.
இதற்கமைய அக்குறஸ்ஸ சுபத்ராராமய விகாரையின் விகாராதிபதி வீரபாண ஜினரட்ன தேரர், கோடப்பிட்டிய ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கநாயக்க அகலஹட ரத்னபால மகாநாயக்க தேரர் ஆகியோரிடம் குறித்த பகுதிகளுக்கான நிவாரணப் பொருட்களைக் கையளித்தார்.
அத்துடன், அக்குறஸ்ஸ கோடப்பிட்டிய முஸ்லிம் மக்களுக்கான நிவாரணங்களை கோடப்பிட்டிய முஹையித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத பேதங்களுக்கு அப்பால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்ட மனித நேயப் பணியினை இதன்போது பாராட்டிய சர்வ மதத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சரின் மாத்தறை மாவட்ட விஜயத்தில் பாத்திமா பௌண்டேஷன் தலைவர் இக்ராம் சஹாப்தீன், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.