நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நேற்று அங்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன் போதே ஞானசார தேரர் மன்றில் ஆஜராகவில்லை என நீதிமன்றுக்கு அறிவித்த அவரது சட்டத்தரணி மனோகர டி சில்வா, அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி அறிக்கை ஒன்றினையும் நீதிபதிக்கு கையளித்தார்.
இதனையடுத்து இது குறித்த வழக்கை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் ஞானசார தேரரை மன்றில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றுக்குள் அத்துமீறியிருந்தார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைவிட அன்றைய தினம் பெரும் தொகையான பிக்குகளுடன் ஞானசார தேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் உள்நுழைந்து நீதிவான் ரங்க திசாநாயக்கவை நோக்கி விரல் நீட்டி இராணுவத்தினரை பழி தீர்க்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தனது குரலை உயர்த்தி அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதனால் அன்றைய தினம் முழுதும் ஹோமாகம நீதிவான் நீதிமன்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து நீதிமன்றை அவமதித்தமை, அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் குறித்த வழக்கின் சாட்சியாளரான சந்தியா எக்னெலிகொடவின் மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரைக் கைது செய்யுமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஞானசார தேரர், 2016 ஜனவரி 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது குறித்த மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான வழக்கு அப்போதைய ஹோமாகம நீதிவானும் தற்போது கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய ரங்க திசாநாயக்கவினால் விசாரணைக்காக மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
இதன் போது குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தவிர்க்க மேன் முறையீட்டு நீதிமன்றில் ஞானசார தேரர் சார்பில் அடிப்படை ஆட்சேபனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. அதன்படி குறித்த வழக்கை கடந்த மே 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
அதன்படி கடந்த மே 24 ஆம் திகதி சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜராகியிருந்தார். இந் நிலையில் நேற்று ஞானசார தேரரை மன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் மன்றுக்கு சமுகமளித்திருக்கவில்லை. எனினும் ஞானசார தேரரின் சட்டத்தரணிகளான மனோகர டி சில்வா, சட்டத்தரணி அனூஷா மன்றில் ஆஜராகி ஞானசார தேரர் சுகயீனமுற்றுள்ளதாகவும் அதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதன் போது குறுக்கிட்ட அரச சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய, வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தில், கடந்த தவணையிலும் சந்தேக நபரான தேரர் மன்றில் ஆஜராகவில்லை என்பதையும் இந்த வழக்கு நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலமையிலான இருவர் கொன்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்ட வழக்கு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொன்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிவரை ஒத்தி வைத்தது.