‘ஐயா, சிறுநீரகம் தேவைப்படுவோருக்கு நான் தர தயாரா இருக்கிறேன். பணம் எதுவும் வேண்டாம். என் பிள்ளைகள் 4 பேரின் படிப்பு செலவை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்’- இப்படி ஒரு இளம் பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உருக்கமாக விடுத்துள்ள வேண்டுகோள் படிப்போரை நெகிழ வைத்துள்ளது.
இவர்தான் அந்த தியாகத் தாய். ஆக்ராவில் இசோகாலனி என்ற இடத்தில் 330 சதுர அடிக்குள் அமைந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்.
ஆர்த்திக்கு 4 குழந்தைகள். அனைவரும் பள்ளியில் படிக்கிறார்கள். சிறிய அளவில் ஆடைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆர்த்தி அதில் கிடைத்த வருமானம் மூலம் குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். கடந்த சில மாதங்களாக தொழில் நலிந்துவிட்டதால் வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்.
இந்த நிலையில் 4 பிள்ளைகளுக்கும் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர முடியாமல் இருக்கிறார். அதில் 3 பேர் பெண் குழந்தைகள்.
பல பேரிடம் உதவி கேட்டு அலைந்துள்ளார். ஆனால் எந்தப்பக்கம் இருந்தும் உதவிக்கரம் நீளவில்லை.
ஆர்த்தி இவ்வளவு ஏழ்மையில் இருந்த நிலையிலும் அந்த பகுதியை சேர்ந்த 11 ஏழை பெண்களுக்கு பலரிடம் உதவி பெற்று திருமணமும் செய்து வைத்துள்ளார். அப்படிப்பட்டவரின் பிள்ளைகளுக்கு உதவ ஒருவர் கூட முன்வரவில்லை. மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனால் உதவி செய்ய மறுத்து விட்டனர்.
கடந்த மாதம் தனது சமையல் கியாஸ் சிலிண்டரை வெளி மார்க்கெட்டில் விற்று அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஏப்ரல் 29ம் திகதி லக்னோ சென்று முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அவர் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.
வேறு வழி எதுவும் தெரியாததால் கிட்னியை விற்க ஆர்த்தி முடிவு செய்துள்ளார். கையில் எழுதி தனது வேண்டுகோளை பேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார்.
ஆர்த்தியின் இந்த முடிவும், வேண்டுகோளும் பலரையும் உலுக்கி இருக்கிறது.