பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை படுகொலை செய்யும் இரகசிய சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவரை சிறைச்சாலைக்குள்ளேயே வைத்து தீர்த்துக் கட்டும் இரகசிய சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான தண்டனைக் கைதியொருவர் பொலிசாருக்கு எழுத்து மூல அறிவித்தல் கொடுத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போதைக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் அறிக்கையொன்றின் ஊடாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 2015ம் ஆண்டு இது தொடர்பாக சிறைக் கைதியொருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பும் இது தொடர்பாக அண்மைக்காலமாக பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்துள்ளது. இவ்வாறான ஒரு முறைப்பாட்டின் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்ற நிலையை ஏற்படுத்துவதுடன், ஞானசார தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அவரை சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து தப்புவித்துக் கொள்ளவும் பொதுபல சேனா அமைப்பு முயற்சி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.