நாட்டில் இனவாதத்தைத் தூண்டுபவர், உரமூட்டுபவர் ஞானசார தேரர் அல்ல. அமைச்சர்கள் ரிசாத், ரவூப்ஹக்கீம் மற்றும் அசாத்சாலி முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் விஜயகலா ஆகியோரே இனவாதத்தை தூண்டுகிறார்கள். எனவே ஞானசார தேரரை கைது செய்வதற்கு முன்பு இவர்களை கைது செய்யுங்கள்.
ஞானசார தேரர் தானாகவே முன்வந்து ஆஜராவார் என சிங்கள ராவயவின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
நேற்று மதியம் ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது புதிய சட்டத்தின் கீழேயே ஞானசார தேரரை கைது செய்ய முயற்சிக்கிறார்கள் இன்று முஸ்லிம்களால் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன.வனபிரதேசங்கள் சைத்தியாக்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நாம் வேதனையால் துன்பத்தால் துடிக்கிறோம்.
கண்களிலிருந்து நீர் வழிகிறது.ஞானசார தேரர் ஒரு குற்றவாளி அல்ல.அவர் பௌத்த மதத்துக்காகவும் பௌத்த நாட்டுக்காகவும் குரல்கொடுப்பவர். அவருக்கு ஏதும் ஏற்பட நாம் விடமாட்டோம். அவரைக் கைது செய்ய முடியாது. அவ்வாறு கைது செய்தால் எம்மையும் கைது செய்ய வேண்டிய நிலைமை உருவாகும் அதற்கு மேலும் 1000 சிறைச்சாலைகள் அமைக்க வேண்டியேற்படும்.
எமக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்க வேண்டியேற்படும். எமக்குப்பின் வருபவர்களும் சந்ததியினரும் ஞானசார தேரருக்காக குரல் கொடுப்பார்கள்.இன்று பௌத்த தலங்களுக்கும் தொல்பொருள் பிரதேசங்களுக்கும் வனபிரதேசங்களுக்கும் ஏற்பட்டுள்ள அழிவுகளை நாம் அனைத்துக்கட்சி அரசியல் தலைவர்களிடமும் பட்டியலிட்டுக் கொடுக்கவுள்ளோம்.
நாம் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்களைக் சந்தித்து இம்முறைப்பாடுகளை கையளிக்கவுள்ளோம்.பள்ளிவாசல்கள் முஸ்லிம் கடைகள் தாக்குதல்கள் பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. நாம் இதில் சம்பந்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தும் படியே நாம் கூறுகிறோம். எமது பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.
நல்லிணக்கத்துக்கு நாம் தயாராகவே இருக்கிறோம். ஆனால் சிலர் எம்மை இனவாதிகளாக பட்டம் சூட்டியிருக்கிறார்கள். சிலர் அரசியல் பின்னணியைக் கொண்டே நாம் செயற்படுவதாகக் கூறுகிறார்கள். பொதுபல சேனா அமைப்புக்கு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான எந்தத் தேவையுமில்லை.
ஞானசார தேரரின் சொற்பிரயோகங்கள் இனவாதத்தை தூண்டுவதாகக் கூறுகிறார்கள். இதைப்பற்றியே விமர்சிக்கிறார்கள். அவர் மீதும், தேரர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இவற்றினால் பயன் ஏற்படப்போவதில்லை. நல்லிணக்கம் உருவாகப் போவதில்லை.
நாட்டில் தொல்பொருள் சட்டத்தை கடுமையாக அமுல்நடத்தும்படி வேண்டுகோளும், அவ்வாறு அமுல்படுத்தப்பட்டால் இந்தப் பிரச்சினைகள் தானாகவே தீர்வுக்கு வந்து விடும். குருநாகல் தொரயாயவில் ஞானசார தேரர் கைது செய்ய முயற்சிக்கப்பட்டமை திட்டமிட்ட செயல் எனக் கருதுகிறோம். அவரை கைது செய்து கடத்துவதற்கே திட்டமிடப்பட்டிருந்துள்ளது என சந்தேகிக்கிறோம்.
கடத்திச் சென்று கொலை செய்வதற்கான முயற்சி இது.ஒனேகம ஜலகெலும்மின்ன வன பிரதேசத்தில் முஸ்லிம்கள் எமது 21 சைத்தியாக்களில் 15ஐ தரை மட்டமாக்கியிருக்கிறார்கள். அவ்விடத்தில் மாட்டுப் பண்ணையும், மாடு அறுக்கும் மடுவமும் அமைத்திருந்தார்கள்.
சைத்தியா நிர்மாணத்தின் கற்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எமக்கு வேதனை ஏற்படாதா? கண்ணீர் வராதா?
அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துப் பேசினோம். அவர் இலங்கை பௌத்த நாடு அல்ல என்கிறார். அவர்களுக்கும் சொந்தம் என்றார். அப்படியென்றால் எப்படி நல்லிணக்கம் உருவாகும். நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.