நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் பள்ளிவாசல்கள் தாக்குதல்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட முஸ்லிம் விரோதபோக்குகளுக்கு எதிராக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) நேற்றுமுன்தினம் மாகாண சபைக்கு கறுப்பட்டியணிந்து சென்றார்.
அத்துடன் அங்கு இனவாத செயற்பாடுகள் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்து உரையாற்றினார்.
அவர் சபையில் உரையாற்றும் போது,
நாட்டை இனவாதத்திற்கு கொண்டு செல்லும் ஒரு சூழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கு நாம் பலிக்கடாவாக முடியாது. அரசியல் செய்வதாயின் அரசியல் விதி முறைகளின்படி அணுக வேண்டும். அதனை விட்டு விட்டு பிழையான அணுகு முறைகளைக் கொண்டுவரக் கூடாது; கையாளவும் முடியாது.
அண்மைகாலச் சம்பவங்கள் அதனை நிதர்சனமாக எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சிறிய குழு ஒரு சில இளைஞர்களையும் மதகுருக்களையும் அழைத்துக் கொண்டு வீராப்புப் பேசித் திரிகின்றது. பேசினால் மட்டும் பரவாயில்லை. கடந்த சில நாட்களாக பள்ளிகள் தாக்கப்பட்டு வருகின்றன. மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டுவதே சமயங்கள்.
சமயங்களுக்கு வழிபாட்டு முறைகள் உண்டு. அவ்வாறு வழிபடுவதற்கே வணக்கஸ்தலங்கள் அமைக்கப்படுகின்றன. அவை பள்ளியாக இருக்கலாம். கோவில்களாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒன்றாகவும் இருக்கலாம்.
ஆனால் மத வழிபாட்டிடங்களில் கைவைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பியதாக வரலாறுகள் இல்லை. எனவே மத நிந்தனை அல்லது வழிபாட்டு ஸ்தலங்களின் மீது தாக்குதல் நடத்துவதை நாகரிக சமூகம் ஏற்றுக் கொள்ளாது. அண்மையில் சில பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதற்கு எனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில்தான் நான் இன்று கறுப்பட்டி அணிந்து வந்துள்ளேன்.
எனக்கு தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களைச் சேர்ந்த முத்தரப்பினரும் வாக்களித்துள்ளனர். என்னால் எனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்ற முடியாது. நான் பிரதிநிதித்துவப் படுத்துவது இன, சாயம் பூசிய கட்சியல்ல. ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனவே எம்மில் ஐக்கியம் உண்டு. நாம் சகலரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சியினர். எனவே இனவாதம் மதவாதம் பேசும் சகல செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பௌத்தர்கள் மதிக்கும் மகாநாயக்க தேரரை குறை கூறிக்கொண்டு அவர் முன்னிலையில் வந்து ஓர் இனத்தை அழிப்பேன், பள்ளிகளை உடைப்பேன் என ஒருவரால் எப்படி சவால் விட முடியும். இவ்வாறான செயற்பாடுகளை கண்டும் காணாதது போல் இருக்க முடியாது. மாகாண சபை என்ற வகையில் இப்படியான விடயங்களுக்கு ஒரு தீர்வு பெறப்பட வேண்டும எனக் கேட்கிறேன்.
இவ்வாறான பிரச்சினைகள் ஆரம்பத்திலே களையப்பட வேண்டும். தலை தூக்க அனுமதிக்கக் கூடாது. பிரச்சினைகள் பூதாகரமாகிய பின் யோசிப்பதில் பயனில்லை.
மத்திய மாகாணத்தில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சருக்கு உண்டு. எனவே அவர் அதனை சரியாகச் செய்வார் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.