Breaking
Mon. Nov 25th, 2024

(ஊடகப்பிரிவு)

‘வாருங்கள், குடியேறுங்கள், முழுஉதவிகளையும் நல்குகின்றோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள் அழைக்கின்றார்கள். அதே நேரம் குடியேறச் செல்லும்போது அதே கட்சியை சேர்ந்த இன்னும் ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

 

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு (24.05.2017) கலந்து கொண்ட அமைச்சர், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து அவர் கூறியதாவது,
சுமார் 25வருடங்களாக தென்னிலங்கையில் வாழும் அகதிகளின் மீள்குடியேற்றத்தில்; குறிப்பிடத்தக்களவு எந்தவொரு முன்னேற்றமோ, எந்தவொரு திட்டமோ மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் அரசிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே மீள்குடிறே விசேட செயலணி உருவாக்கப்பட்டது. எனினும், இந்தச் செயலணியை இயங்கவிடப்போவதில்லையென யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வலுவாக கூறப்பட்டுள்ளது.

புலிகளால் துரத்தப்பட்ட இந்த மக்களை மனிதாபிமானத்துடனும், மனச்சாட்சியுடனும், குடியேற்றவேண்டிய பொறுப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட, மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழுக்களினதும், வடமாகாண சபையினதும் அதிகாரத்தை வைத்திருக்கும் கட்சிக்கு இருக்கின்றது. எனினும், அவர்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக இருக்கின்றார்கள் என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை. புலிகள் வடக்கிலே கோலோச்சிய காலம் வேறு, இப்போது ஜனநாயகம் நிலவுகின்றது. எனினும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பங்கு கொண்டவர்கள் வடக்கு முஸ்லிம்கள் குடியேற இன்னும் முட்டுக்கட்டையாக இருப்பதுதான் வேதனையானது.

அரசியல் அமைப்புச் சபைக்கூட்டங்களிலே தேர்தல் முறை மாற்றம், அரசியல் சீர்திருத்தம் என்ற பெரியபெரிய விடயங்களை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் துரத்தப்பட்ட, தங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த சகோதர இனத்தை அரவணைக்க மறுக்கின்றார்கள். இது தொடர்பில் எங்களுடன் அமர்ந்து ஒரு சிலமணிநேரமாவது, பேசுவதற்கும் விரும்புகிறார்கள் இல்லை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அவர்களின் காணிப்பிரச்சினை தொடர்பிலும் தீர்வை காணவேண்டியதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கினறேன். அவர்கள் இந்த விடயத்தில் நியாயமாக சிந்திக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றேன்.

நல்லாட்சிக்கு நாம் உதவ முற்பட்டபோது வெறுமனே மானாங்கணிசமாக அந்த தலைவர்களுடன் சங்கமிக்கவில்லை. ஜனாதிபதி வேறொரு கட்சிலிருந்து ஆக 8பேருடன் வந்திருந்த நிலையில் அவருடன் முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் குறித்து பேச்சு நடத்தினோம். எனினும் நல்லாட்சியின் முக்கிய கர்த்தாவான ஜ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டோம்.

இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் கணிசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் 100சதவீதம் உதவி அளிப்பார்களென்று நம்புகின்றோம். விசேட செயலணிக்கு வடக்கில் உள்ள வேறு எவராவது தடைகள் ஏதும் போட்டால் எங்களது ஒட்டுமொத்த பலத்தையும் பயன்படுத்தி நியாயம் கேட்போம். உள்ளுர் பொறிமுறையிலோ இந்த அரசாங்கத்திலோ எங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் ஜெனீவா வரை சென்று நாம் நியாயம் கேட்போம் என்று அமைச்சர் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *