முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், அவர்களது வர்த்தக நிலையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களும் தீ வைப்புச் சம்பவங்களும் இடம்பெற்று வரும் நிலையில் அவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட திட்டத்தை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தங்களின் பொலிஸ் பிரிவில் இடம்பெறும் இவ்வாறான வழிபாட்டுத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இன ரீதியிலான செயற்பாடுகள் தொடர்பில் பொறுப்புக் கூறும் விதமாக இந்த திட்டத்தை அமுல் செய்ய சாகல ரத்நாயக்கவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி உடனடியாக குறித்த விடயம் அமுல் செய்யப்படவுள்ளது. இதனை விட சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் அனைத்து தனி நபர்களுக்கும் எதிராக பாராபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சாகலவுக்கு உத்தரவிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போதே இந்த உத்தரவுகளை அமுல் செய்ய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற போது சிறுபானமை இனத்தவர்கள் மீது முன்னெடுக்கப்படும் கெடுபிடிகள், தற்போது உருவாகி வரும் அச்சுறுத்தலுடன் கூடிய சூழல் தொடர்பில் அமைச்சர்களான மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹகீம், கபீர் ஹசீம், துமிந்த திஸாநயக்க, தலதா அத்துகோரள உள்ளிட்டவர்கள் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
முதலில் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் கருத்து தெரிவித்த கனேசன்,
இன்று ( நேற்று) அதிகாலை கூட காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன.
எனது அமைச்சுக்குள் அமைச்சில் பொதுபல சேனைவின் அத்து மீறுகின்றனர். இதன் முடிவு என்ன. ஏன் இது குறித்து சட்டம் அமுல் செய்யப்படுவதில்லை.
எனது அமைச்சுக்குள் அல்லது நான் செல்லும் இடங்களில் எந்த தீவிரவாத சக்திகள் வந்தாலும் என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் எனது அமைச்சுக்கு சிங்கமாக வந்த பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் பூனையாக திரும்பி போனார்.
ஆனால், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஆகிய கட்சிகளுக்கு நல்லாட்சிக்காக வாக்களித்த சிறுபான்மை மக்களை, எமது அரசாங்கத்திடமிருந்து பிரித்து, எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்களிக்காமல், அவர்களை வீட்டில் இருக்க செய்யும் திட்டமே இதுவாகும். என ஆவேசத்துடன் மனோ கனேசன் அமைச்சரவையில் தீர்மானமெடுக்க வேண்டினர்.
இதனையடுத்து அடுத்து, அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ஞானசார தேரர் முஸ்லிம்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் இனவாத செயற்பாடுகள், அவர் மீது சட்டத்தை அமுல் செய்ய அரசாங்கம் தயங்குவதன் பின்னணி என்ன என்பது குறித்து அமைச்சரவையில் கேள்வி எழுப்பினார்.
இதன் போது அமைச்சர்களான கபீர் ஹசீம், ரவூப் ஹக்கிம், துமிந்த திசாநாயக்க, உள்ளிட்டோரும் இது குறித்து தத்தமது கருத்துக்களை பதிவு செய்தனர். இதனையடுத்து தற்போது குறித்த செயற்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் செயன்முறைகள் நடைமுறையில் உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
காவத்தை நகரில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் தொடர்பில்இ அப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் தலதா அத்துகோரல அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்களின் கருத்துக்களை மிக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அமைச்சரவையில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதிஇ சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினார். தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் முறையில் சட்டம்இ ஒழுங்கை நிலைநாட்டுமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.
அதையடுத்து இந்த இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ விளக்கமளித்துள்ளதுடன் எந்த வகையில் அவற்ரைக் கட்டுப்படுத்தலாம் என்பது குரித்து ஆலோசனைகளை சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு வழங்கியுள்ளார்.
சம்பவங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூறிவைக்கும் நடைமுறையை உடனடியாக அமுல் செய்யுமாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு இதன் போது பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் போது தன்னை நேற்று ( நேற்று முன் தினம் ) முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பீக்கள் சந்தித்ததாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்கு தெரிவித்தார். அதையடுத்து இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம்இ ஒழுங்கு பொது பிரச்சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை இனவாத மதவாத செயற்பாடுகள், வழிபாட்டு நிலையங்கள் மீதான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஊடாக பொலிஸாருக்கு விஷேட ஆலோசனைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.