வவுனியாவில் இன்று பகல் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிஸ் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
வவுனியா நகரில் இன்று பகல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டிடம் ஒன்றின் பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையால் அது சேதமடைந்துள்ளது.
குருமன்காடு பகுதியில் பாரிய மரம் ஒன்று பாறி விழுந்தமையால் சில மணிநேரம் மன்னார் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இது தவிர வவுனியா மாவட்ட செயலகம் வைத்தியசாலை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் உள்ள மரங்கள் விளம் பரபலகைகள் முறிந்து விழுந்தமையால் வீடுகள் கட்டிடங்கள் வீட்டு மதில்கள் என்பனவும் சிறு சேதங்களுக்குள்ளாகியுள்ளன. வவுனியா நகரப்பகுதியின் பரவலாக மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது.