இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலை தளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகின்றது.
14-24 வயதிற்குட்பட்ட 1,479 பேரிடம் ஐந்து பிரபல சமூக ஊடகங்களில் எது பயன்பாட்டாளர்கள் மீது மிகவும் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று மதிப்பிடுமாறு அந்த கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்டது.
கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு சமூக ஊடங்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டது.
பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனநல சுகாதார தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
‘பற்றாக்குறை மற்றும் பதட்டம்’ ஒருவர் சமூக வலைதளங்களை அதிகமான பயன்படுத்தினால் அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், அதோடு மனநல சுகாதார பிரச்சனை உள்ள பயனர்களை அடையாளம் காட்டவேண்டும் என்று பொது சுகாதாரத்திற்கான ராயல் சொசைட்டியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
”சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்சனையை தூண்டுவதாக இருக்கலாம்” என்று அறிக்கை எச்சரிக்கின்றது.
சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே சமயத்தில் அந்த அறிக்கை, உதாரணத்துக்கு, இன்ஸ்டாக்ராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகிவற்றின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுததியிருப்பதாகக் கூறுகிறது.
வேறு எந்த வயதினரை காட்டிலும், இளைஞர்களில் சுமார் 90% பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளனர்.