பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது என்பதற்காக இணைந்த வடகிழக்கில் குறிப்பிட்ட அதிகாரங்களுடன் தனி அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதியில் அமைக்கப்பட்ட பொதுநூலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடகிழக்கு மக்கள் கல்வி அறிவில் முன்னிலையில் இருந்த காரணத்தினால் அந்த இனத்தை அழிக்க வேண்டும், அவர்களது பூரணத்துவத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று 1981ஆம் ஆண்டு ஜுன் மாதம் 01 ஆம் திகதி கிழக்காசியாவின் மாபெரும் வாசிகசாலையாக இருந்த யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. அது எரிக்கப்பட்டு இன்று 36வருடங்களை கடந்துள்ளன
அந்த நூலக எரிப்பினை தொடர்ந்து தமிழ் மக்கள் எந்தளவுக்கு நசுக்கப்பட்டார்கள், நாங்கள் எந்தளவுக்கு துன்புறுத்தப்பட்டோம், எந்தளவுக்கு அடிமைகளாக்கப்பட்டோம், நாங்கள் ஏன் போராடினோம் என்பதற்கு பெரிய உதாரணமாக யாழ் நூலகம் இருந்து வருகின்றது.
அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எமது விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். எட்டு வருடங்களை கடந்துள்ள நிலையிலும் அந்த போராட்டத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
அதேபோன்று இந்த போராட்டத்தினை நசுக்கி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்த மகிந்தவும் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை நடாத்துகின்றார். இந்த நாட்டில் ஒரு இனம் துன்பப்பட்டு, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்போது இன்னுமொரு இனம் வெற்றிக் கொண்டாட்டத்தை செய்து கொண்டிருக்கின்றது என்றால் இந்த நாடு எங்குள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமக்கான அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எமக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எங்களது பிரதேசத்தினை நாங்கள் பாதுகாக்கும் நிலப்பாடு ஏற்பட வேண்டும். இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துகளையும் பறிகொடுத்தது எமது நிலங்களையும் மண்ணையும் பாதுகாப்பதற்காகவே.
பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையினைப்பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் போராடக்கூடாது என்பதற்காக இணைந்த வடகிழக்கில் குறிப்பிட்ட அதிகாரங்களுடன் தனி அலகு ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அந்தவகையில் இணைந்த வடகிழக்கிற்காக போராட வேண்டும். அதற்காக ஒன்றுபட்டு நாங்கள் எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய வேணடும் என்றார்.