ஈரானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி ஹசன் ருஹானி, மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியாக இருந்த 78 வயதாகவும் ஹசன் ருஹானி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பழமைவாத தலைவரான இப்ராகிம் ரைசியை தோற்கடித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
சர்வதேச அவதானிப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த ஜனாதிபதி தேர்தலானது ஈரானிய ஜனநாயக வரலாற்றில் முக்கிய தேர்தலாக கொள்ளப்பட்டுள்ளது. காரணம் முன்னாள் ஜனாதிபதி சர்வதேச சமூகங்களுக்கு எதிர்காலத்தில் ஈரானின் அணுவாயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இடம்பெற்ற தேர்தலில் சுமார் 40 மில்லியன் மக்கள் வாக்குகளை பதிவு செய்திருந்ததாகவும், அதில் ருஹானி 23 மில்லியன் வாக்குகளையும், இப்ராகிம் ரைசி 15.7 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த ஜனாதிபதி தேர்தலின் போது ருஹானியின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும், தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் எதிரணி போட்டியாளரான இப்ராகிம் ரைசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.