(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என கருத்து தெரிவிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தினூடாக வட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்கள் அண்மையில் பகிரங்கமாக வெளியிட்ட வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் மூலம் முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவு வழங்குவது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளும், சுதந்திரமும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டியதாகும். ஆனால் எமது மக்களின் உரிமைகளை உதாசினப்படுத்தும் விதத்தில் தற்போது வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களால் வெளியிட்டுள்ள கருத்தினை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என தெரிவித்தள்ளார்.
மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் மறுபுறம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர் வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவு வழங்குவதுமானது மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றுகின்ற ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு ஒப்பந்த அடிப்படையிலேயே நாங்கள் இணைந்திருக்கின்றோம் என்று கூறுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது அவர்களுடைய ஒப்பந்தத்தில் நாங்கள் வட கிழக்கு இணைப்பிற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்ற ஒரு சரத்தினை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
ஆனால் இந்த விடயங்கள் எதனையும் தங்களது ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளாமல் வெறுமென ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாத்திரம் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்டதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
ஒரு அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவரினுடைய கருத்தினை அவருடைய தனிப்பட்ட கருத்தாக ஒரு போதும் கருத முடியாது. அவ்வாறு தனிப்பட்ட கருத்து என்று கூறுவதானது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினுடைய நிருவாக கட்டமைப்பு தொடர்பான சந்தேகங்களை தோற்றுவிப்பதோடு ஐயூப் அஸ்மின் அவர்கள் வெளியிட்ட கருத்தினைத் தொடர்ந்து அவரை வட மாகாண சபையிலிருந்து மீளழைப்பு செய்யப்போவதாக தற்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையானது மக்கள் மத்தியில் ஒரு கேலிக்கூத்த்தாக மாறியிருக்கின்றது.
ஐயூப் அஸ்மின் அவர்களின் மீளழைப்பு தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுழற்சி முறையில் வட மாகாண சபைக்கு இன்னுமொருவரை நியமிப்பதற்காகவே குறித்த மீளழைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த நான்கு ஆண்டுகளில் மீளழைப்பு ஒன்றினை மேற்கொள்வதில் நிலவிவந்த சட்டச் சிக்கல் காரணமாகவே தற்போது வட மாகாண சபையின் இறுதி நிர்வாக ஆண்டில் இவ் மீளழைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாகாண சபை உறுப்பினர்களை சுழற்சி முறையில் மாற்றுவதில் அத்தகைய பாரிய சட்டச் சிக்கல்கள் எதுவும் எமது நாட்டு அரசியல் சட்டத்தில் இருந்ததாக அறியப்படவில்லை. குறிப்பாக எமது கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்க கூட்டமைப்பினுடைய போனஸ் ஆசனத்திற்கு இரண்டு முறை சுழற்சி முறையில் உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கருத்துக்கு அமைவாக சுழற்சி முறையில் உறுப்பினர்களை மாற்றுவதில் நான்கு வருடங்களாக சட்டச் சிக்கல்கள் நிலவி வந்ததாகவிருந்தால் ஐயூப் அஸ்மின் அவர்கள் வெளியிட்ட வட கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்தினைத் தொடர்ந்து குறித்த சட்டச் சிக்கல்கள் தீர்கப்பட்டு விட்டதா என்ற பாரிய சந்தேகத்தினையும் இது தோற்றுவிக்கின்றது.
தங்களது மாகாண சபை உறுப்பினரை சுழற்சி முறையில் மாற்றுவதாகவிருந்தால் அது தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு செய்துகொண்ட உடன்படிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய எந்த விடயங்களும் அவர்களின் உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவில்லை.
உண்மையில் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுக்கள் வட மாகாண மக்களினால் ஆதார பூர்வமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியக்கிடைத்துள்ளது.
குறித்த விடயமே ஐயூப் அஸ்மின் அவர்கள் வட மாகாண சபையிலிருந்து அவசர அவசரமாக மீளழைப்பு செய்யப்படுவதற்குரிய பிரதான காரணம் என்பதோடு நான்கு வருட காலமாக காணப்பட்ட சட்டச் சிக்கல்கள் காரணமாகவே இதுவரை காலமும் எம்மால் மீளழைப்பு ஒன்றினை மேற்கொள்ள முடியவில்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினரால் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் மக்களை ஏமாற்றுவதற்கான வெறும் கண்துடைப்பு மாத்திரமேயாகும்.
எனவே வட கிழக்கு இணைப்பிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து தனது உறுப்பினரை மீள்சுழற்சி செய்வதற்கு முற்பட்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது தனது உறுப்பினரை மீளழைப்பு செய்து அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு மாற்றமாக வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.