‘இந்த நாடு யாருடையது? சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்து கொள்கின்றீர்களா?’ என ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் கேள்வி கேட்க அதற்கு அமைச்சர், ‘தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..’ என பதிலளிக்க முற்பட்டபோது இடைமறித்த தேரர், ‘இல்லை இல்லை இந்த நாடு யாருக்கு சொந்தமானது?’ என கேட்க, அமைச்சர் ‘இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்று கூற முற்பட்ட போது, கோபமடைந்த தேரர் முறையற்ற சொற்களை பாவித்து இந்த நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று தெரியாமல் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்து முடியும் என்றார்.
பிரச்சினை தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் கதைக்காமல் வீட்டில் கூலிக்கு இருப்பரிடம் கதைப்பது எவ்வாறு நியாயமாகும். இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. வந்து குடியேறிய தமிழ், முஸ்லிம்களே எங்கள் மொழி, எமது கலாசாரம் வரலாறு என்பவற்றை அறிந்துகொள்ள வேண்டும். சிங்கள மொழியை இவர்களே கற்றறிய வேண்டும். அதைவிடுத்து நாங்கள் எதற்காக தமிழை கற்க வேண்டும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் இனவாதமாக பேசினார்.
மேலும் இந்த அமைச்சு பதவிக்கு நீங்கள் தகுதியற்றவர் எனவும் தேரர் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் மிகவும் பொறுமையான முறையில் பதிலளித்தார்.
இன்று முற்பகல் இராஜகிரியவில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் காரியாலயத்துக்குள் நுழைந்த ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினேரே இவ்வாறு முறையற்ற தனமாக நடந்துள்ளனர்.