Breaking
Mon. Nov 25th, 2024

வடமாகாண கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு யாழ்.மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இன்று(15) கையளிக்கப்பட்டதோடு முறைப்பாடு தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/காசிப்பிள்ளை வித்தியாலயம், யா/நீர்வேலி அ.த.க.பாடசாலை, யா/கலட்டி அ.மி.த.க. பாடசாலை, யா/பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/உடுவில் அ.மி.த.க.பாடசாலை, யா/பொன்னாலை வரராஜப்பெருமாள் வித்தியாலயம்,

தீவகம் கல்வி வலயத்துக்குட்பட்ட – யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க. பாடசாலை, தென்மராட்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/வரணி வடக்கு சைவப்பிரகாச பாடசாலை, யா/போக்கட்டி றோ.க.த.க.பாடசாலை, வடமராட்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா/வெற்றிலைக்கேணி றோ.க.த.க. பாடசாலை கிளிநொச்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட கிளி/தர்மகேணி அ.த.க.பாடசாலை, கிளி/முகாவில் அ.த.க.பாடசாலை போன்ற பாடசாலைகளுக்கு எவ்விதமான அதிபர் வெற்றிடமும் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டிருக்கவில்லை.

பல புதிய தகுதியான அதிபர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படாமல் பல பாடசாலைகளில் அதிபர் தரத்திலுள்ளவர்கள் ஒரே பாடசாலையில் மூன்றுக்கும் அதிகமான பதில் அதிபர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி ஆசிரியர் தரத்திலுள்ளவர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை எமது சங்கத்தின் கவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் – 3 போட்டிப்பரீட்சையில் வடமாகாணத்தில் 389 பேர் அதிபர்களாக நியமனம் பெற்றுத் தகுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வெளியேறியுள்ள நிலையில் அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளை வழங்காமல் புதிய அதிபர் நியமனம் தொடர்பான 05.09.2016 திகதி 2016/ED/E/24 இலக்க அமைச்சரவைப் பத்திரத்தையும் மீறி ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு அதிபர் பதவி வழங்கப்பட்டுள்ளமை மிகப் பாரிய முறைகேடாகும்.

(அமைச்சரவைப்பத்திரம் அ.1 என இணைக்கப்பட்டுள்ளது. ) அத்துடன் ஒரு பாடசாலையில் அதிபர் வெற்றிடம் உருவாகுமானால் 06.07.1998 திகதிய 1998/23 சுற்றறிக்கைக்கு அமையவே அப்பாடசாலைக்கு அதிபர் வெற்றிடம் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும். (1998/23 சுற்றறிக்கை அ.2 என இணைக்கப்பட்டுள்ளது. )

இவ்வாறான முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது அதிபர் தரத்தினையுடையவர்கள் வடமாகாணத்தில் அதிகமாகவிருக்கின்ற போதிலும் ஆசிரியர் தரத்தில் இருப்பவர்களை அதிபர்களாக நியமித்தமையானது வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரத் துஸ்பிரயோகம் என்பதுடன் இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையையையும் மீறும் செயலாகும்.

இவ்வாறான முறைகேடுகளுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு தீர்வினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *