மன்னார் பெரியமடு கிழக்கு கிராமத்தில் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ” நெல் அறுவடை விழா ” நிகழ்வு அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றலுடன் மிக பிரம்மாண்டமான முறையில் இன்று நடைபெற்றது.
வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 60 ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சை டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான இந்த நெல் அறுவடை விழா நிகழ்வு யுத்தம் நிறைவு பெற்று நல்லாட்சி நிலவும் சந்தர்ப்பத்தில் தாம் வாழ்ந்த பாரம்பரிய கிராமங்களில் நடாத்துவது இன்று எமது நாட்டின் சுதந்திரத்தினையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் எடுத்துக்காட்டும் ஓர் நிகழ்வாக அமையப்பெற்றது முக்கிய ஒரு விடயமாகும்.
இதன் போது உரையாற்றிய றிப்கான் பதியுதீன்” உண்மையில் இந்த நிகழ்வு இங்கு நடத்தப்படுவது மனம் நிறைந்த சந்தோசத்தினை தருகின்றது எமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன் நாங்கள் எவ்வாறு இங்கு இருந்தோமோ அதே போன்று ஒரு நாளை இன்று நான் உணர்கிறேன் உண்மையில் இனம், மதம், மொழி, பிரதேசம் போன்ற அனைத்தும் கடந்து ஒரு சகோதரத்துவத்துடன் இந்த நிகழ்வினை
நடாத்துவது எமது எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையானது சிறந்ததாக அமையும் என்பதில் ஒரு நம்பிக்கை தோன்றுகிறது.
அதுமட்டுமல்லாது இங்கு வருகை தந்துள்ள மாகாண சபை உறுப்பினர்கள் மூவரிடமும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது மாகாணசபைகளில் பாரியளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை இருந்தாலும் நாங்கள் எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் ” என தெரிவித்தார்.