வலி – வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு தொடக்கம் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 800ற்கும் அதிகமான வீடுகள் முதலாம் கட்டத்தில் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்தில் பயனாளிகள் விபரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் வலி-வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஒரு தொகுதி மக்களுடைய நிலம் மக்களிடமே மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் மக்களுடைய வீடுகள் போரினால் அழிக்கப்பட்டமை மற்றும் படையினர் அழித்தமை போன்றவற்றினால் மீள்குடியேற்ற பகுதிகளில் மக்கள் உடனடியாக குடியேறுவதற்கு வீடுகள் இல்லாத நிலை காணப்பட்டிருந்தமையினால் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் உடனடியாக மீள்குடியேற முடியாத நிலை காணப்பட்டிருந்தது.
மேலும் உடனடியாக குடியேறிய மக்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொண்டு தங்கியிருந்தார்கள்.
இந்நிலையிலேயே மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தலா 8 லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் வலி. வடக்கு பிரதேச செயலகத்திற்கு முதலாம் கட்டமாக 800 வரையானவை வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய பெயர் விபரங்கள் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பயனாளிகள் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் 14 நாட்களுக்குள் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பயனாளிகளும் தங்கள் இருப்பிடம் தொடர்பான தகவல்களைஉறுதிப்படுத்தி தமக்கு வேறு பகுதிகளில் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென பிரதேச செயலகம் அறிவுறுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் குறித்த வீட்டுத் திட்டங்கள் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுவதுடன் ஒவ்வொன்றினதும் பெறுமதி 8 லட்சம் ரூபாய் என தெரியவருகின்றது.
இந்த வீடுகள் காங்கேசன்துறை, மயிலிட்டி, வசாவிளான் கட்டுவன் போன்ற 2015ஆம் ஆண்டு தொடக்கம் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேறும் மக்களுக்காக வழங்கப்படுகின்றது.