“நாட்டின் வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணிக்கு பங்கு இல்லை என்று கூற முடியாது. கறுப்பு வரலாறு இருக்கிறது. அதனை மூடி மறைக்க முடியாது. வரலாற்றில் சகலரும் தவறிழைத்துள்ளோம். 76 ஆண்டுகால சாபம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி தப்பிக்க முயற்சிக்கக்கூடாது. 76 ஆண்டு கால சாபத்தில் 51 சதவீத பங்கை மக்கள் விடுதலை முன்னணியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் திறந்த பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்பதும் எங்களுக்கு தெரிகிறது. அதனை ஏற்றுக்கொள்வதில் அரசாங்கத்திடம் சிறிய வெட்கமும் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதுவே தற்போதுள்ள பிரச்சினையாகும்.
வரலாற்றை நினைவுகூர வேண்டாம் என்று
எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கூறுவதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். வரலாற்றை பற்றி நாங்கள் பேசவில்லை. ஆனால் வரலாற்றை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். வரலாற்றில் பல்வேறு விடயங்களில் தவறிழைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நாடு இன்று நெருக்கடியை சந்தித்துள்ளது. வரலாற்றை பற்றி சிந்தித்தால் மாத்திரமே எமது தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். சரியான பாதையில் செல்ல முடியும்.
வரலாறு என்று கூறும்போது, நாட்டின் வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணிக்கு பங்கு இல்லை என்று கூற முடியாது. கறுப்பு வரலாறு இருக்கிறது. அதனை மூடி மறைக்க முடியாது. அது எங்களுக்கு தெரியும். சகலரும் தவறிழைத்துள்ளோம். 76 ஆண்டுகால சாபம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி தப்பிக்க முயற்சிக்க கூடாது.
76 ஆம் ஆண்டு கால சாபத்தில் 51 சதவீத பங்கை அரசாங்கத் தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி பேசுகிறார்கள். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் கடந்த அரசாங்க காலப்பகுதியில் எண்ணெய்த் தாங்கிகளின் அபிவிருத்தி தொடர்பில் பேசியபோது ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார். இன்று அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்கள். அதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆரம்பத்திலேயே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் என்று கூறவில்லை. முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை இட்டுள்ளதாக அரசாங்கத்தினர் கூறுகிறார்கள். அதனை மறுக்கவில்லை. ஆனால் அந்த அடித்தளம் பலமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாகும்.
பெருந்தோட்ட மக்களுக்காக 7,322 மில்லியன் ரூபாவை ஒடுக்கீடு செய்திருக்கிறார்கள். இதுதொடர்பில் வர்ண வேடிக்கையையும் செய்து கொண்டிருக்கிறார்கள். தோட்ட வீட்டு வசதிக்காக 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 3,500 மில்லியன் ரூபா என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள கடப்பாடாகும். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் 727 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. நவீன கற்கை வகுப்புகளுக்காக 600 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
தோட்ட உட்டகட்டமைப்பு வசதிக்காக 1,800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலையக இளைஞசர்களின் தொழில்நுட்ப கற்கைக்கான பெரும் ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் பாதீட்டில் இல்லை. 7,322 மில்லியன் ரூபாவில் 4, 100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை பற்றி மாத்திரம் பேசி தீர்வு காண முடியாது. சம்பளத்தினால் மாத்திரம் முன்னேற்றமடையவும் முடியாது. 1,700 ரூபாவை நிர்ணயித்து பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேசுவோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். சம்பளப் பிரச்சினையை மாத்திரம் பேசிகொண்டிருக்காமல் தோட்ட முறையை மாற்றி முறை மாற்றத்தை செய்ய வேண்டும்’’ என்றார்.