65 ஆயிரம் வீடுகள்: ‘சர்ச்சைகள் பற்றி அரசு ஆராய்கிறது’- ஹிஸ்புல்லா

இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பில் அண்மைக் காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நடைமுறை குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, அது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொள்கைத் திட்டமிடல் அமைச்சிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடமைப்பு கட்டுமான ஒப்பந்தத்துக்கான டெண்டர் பத்திரம் கோரப்படுவதற்கு முன்னதாகவே, குறித்த இந்திய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே குறித்த இந்திய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டதாகவும், அந்த நிறுவனத்துக்குத் தான் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று மீள்குடியேற்றத்துறைக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இதனிடையே, குறித்த நிறுவனத்தினால் கட்டப்பட்ட மாதிரி வீடுகள் இலங்கையின் தட்பவெப்ப, காலநிலைக்கு பொருத்தமற்றவை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, எஃகு மற்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு பொருத்தப்படும் இந்த வீடுகள் தமது பிரதேசத்துக்கு பொருத்தமற்றவை என்று வடஇலங்கையிலிருந்து கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

அவ்வாறே, இந்த வீடு ஒவ்வொன்றுக்கும் சுமார் 21 லட்சம் ரூபா செலவு மதிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இலங்கைக்கு பொருந்தாத கட்டுமானம் என்று முன்வைக்கப்படும் விமர்சனம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அமைச்சர் ஹிஸ்புல்லா, இந்த முறைப்பாடு பற்றியும் அதற்கு செலவாகும் நிதியின் மதிப்பீடு பற்றியும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமிடல் அமைச்சு ஆராயும் என்றும் கூறினார்.

இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகக் கூறிய ஹிஸ்புல்லா, அந்தந்த பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலாளர்கள் ஊடாக, மாவட்ட செயலாளர்களால் திரட்டப்பட்ட குடும்பங்களில் விபரங்களின் அடிப்படையிலேயே பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares