58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வாகனங்கள் வழங்கப்படவிருந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறு வாகனங்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இன்று கேட்டேகொட கலப்பு அபிவிருத்தி திட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
விஷேட அபிவிருத்தி சட்டமூலம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது, அது அந்தந்த மாகாண சபைகளின் உரிமைகள் என்றும், அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி தனக்கு கிடைத்திருக்கும் நிறைவேற்று அதிகாரத்தையே குறைக்க பணியாற்றிய போது, உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு தலைவணங்கி சில அதிகாரங்களை மாத்திரம் குறைத்துக் கொண்டதாக கூறிய அமைச்சர், தன்னை விட அதிகாரங்கள் இருக்கும் மற்றொரு “சிறப்பு அமைச்சரை” நியமிக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று கூறினார்.
அத்துடன் நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தமது தேவைகளை இலகுவில் நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாகவும், அதனை தவிர்த்து முதலீட்டாளர்களை வரவழைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
தனது அமைச்சுக்கு படகுகளை வழங்க முன்வந்த ஒருவருக்கு அதனை மேற்கொள்ள முடியாத அளவு சிக்கல்கள் இருந்ததாகவும், அந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
எனினும் இதற்கான நடவடிக்கைகளை பேச்சுவார்த்தை மூலமே மேற்கொள்ள வேண்டும் என்றும், அவசரமாக “சிறப்பு அமைச்சர்” ஒருவரை நியமிப்பதனூடாக அல்ல என்றும் அவ்வாறு சிறப்பு அமைச்சரை நியமிப்பதற்கு ஜனாதிபதியோ அல்லது நானோ ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.