நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு 25 மாவட்டங்களிலும் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டில் 43 சதவீத பெண்கள் உள ரீதியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதும் இதன்போது தெரியவந்துள்ளது. அத்துடன், பெண்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினரின் மதுபான பாவனையினாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, 27.4 வீதமான பெண்கள் அயலவர்களினாலும், 27 சதவீதமான பெண்கள் இனந்தெரியாதோர்களினாலும் 20 வீதமான பெண்கள் உறவினர்களாலும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை மதுசார பாவனைக்கு ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான செயற்பாடுகளுக்காக 29 சதவீதமான பெண்கள் பயன்படுத்தப்படுவதாகவும், 34 சதவீதமான பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.