ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இம்முறையும் ரூபாய் 5000 வாழ்வாதார கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
தொற்றாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கும் நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தியாவசிய உணவுப்பொதி கிடைக்கப்பெறாத மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இந்த ரூபாய் 5000 கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் அத்தியவசிய உணவு பொருட்களை விநியோகித்து மக்களின் வாழ்க்கையை உரிய முறையில் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொற்றாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை முறையாக செயற்படுத்தி கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட பாதுகாப்பான நாட்டை உருவாக்க வேண்டுமாயின் அவர்களுக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டியதுடன், அந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் தலைமையில் பிரதேச சபை, பொலிஸ், பிரதேச சுகாதார சேவை அலுவலகம் மற்றும் கிராம குழுக்களுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
பிரதேச செயலக அலுவலக மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் கிராம குழுக்களின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நிறைவுசெய்யப்படவுள்ளது.
நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசிய வாழ்வாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதுடன் தமது தொழில் பாதுகாப்பிற்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறும் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஒரு நபருக்கு நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக சுகாதாரத் துறையினரை தொலைபேசியில் அழைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ஷ, புதிய தனிமைப்படுத்தல் முறைமை குறித்து பிரதேச மட்டத்தில் தெளிவூட்டல்களை மேற்கொள்ளும் பணிகள் கிராம குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு அத்தியாவசியமான உணவு பொருட்களை பெற்று கொடுக்கும் செயற்பாட்டிற்காக பொருளதார மத்திய நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறப்பதற்கான அவசியம் காணப்படுவதாகவும் இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.
ஆபத்தற்ற, சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆபத்தற்ற பொருளாதார மத்திய நிலையம் என உறுதிசெய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.