மகாசங்கத்தினரை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையின் மூன்றாவது நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
அங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
கடந்த 50 வருட காலமாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவற்றில் எவையும் வடக்கு- கிழக்கு மாகாணங்களை சென்றடையவில்லை.
50 வருடமாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாத மக்கள் வாழ்கின்றனர், அது பிரதேச செயலகத்தால் செய்ய வேண்டிய வேலை. ஆனால் தற்போது நடமாடும் சேவை மூலமே செய்ய முடிந்திருக்கிறது. கடந்த கால யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுதான் இது.
அனைத்து மாவட்டங்களுக்கும், மாகாணங்களுக்கும் அபிவிருத்தி சமமான முறையில் பகிரப்படவில்லை. இப்பகுதியில் பல பாடசாலைகளிலும், அரசாங்க திணைக்களங்களிலும் பற்றாக்குறை நிலவி வருகின்றது. எனவேதான் மேல் மாகாணத்தினை போன்று வட மாகாணத்தினையும் அபிவிருத்தி செய்யவேண்டும் என நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை போன்று, அரசியல் அமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதிலும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அதன்படி புதிய அரசியலமைப்பு ஊடாக அதிகாரத்தினை பகிர்ந்தளிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இதனை தவறாக புரிந்துகொண்டுள்ள சிலர் யுத்தத்தினால் பிரிக்க முடியாத நாட்டை தற்போது நாம் பிரிக்கபோகின்றோம் என விமர்சிக்கின்றனர்.
அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அதிகார பரவலாக்கலை எதிர்ப்பவர்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளுக்கு வரவேண்டும். தென் மாகாணத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வேலைகள் இந்த மாகாணங்களில் உள்ளதா என்பதனை அவர்கள் தங்களது கண்களால் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்.
சில அச்சு ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. உண்மைக்கு மாறான கருத்துக்களை தமது பத்திரிகையில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கிறார்கள். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் நிகழ்ச்சி நிரலில் இயங்கிறார்கள்.
மகாசங்கத்தினரையும் தவறாக வழிநடத்தப் பார்க்கிறார்கள். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அறிக்கைதான் வந்துள்ளது. இது தான் முடிவல்ல. இதில் திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.
தேவையில்லாதவற்றை நீக்க முடியும்.
அதிகாரங்கள் எல்லாப் பகுதிக்கும் பகிரப்பட்டுள்ளது. இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் ஒரே வகையான அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்பதே எமது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த ஜனாதிபதி நடமாடும் சேவையை யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.