மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 5 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தவிசாளர்கள் அப்பகுதிகளில் மக்கள் சேவைகளை மேற்கொள்வதற்கு போக்குவரத்து செய்வதற்குரிய சீரான வாகன வசதிகள் இன்மையினால் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்களது சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்குரிய வாகன வசதிகளை உடன் ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கிழக்கு மாகாண ஆளுனர் றோகித்த போகல்லாகமவிடம் செவ்வாய்க் கிழமை (15) மாலை கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுனருக்குமிடையில் செவ்வாய்க்கிழமை (15) மாலை திருகோணமலையில் வரோதய நகரில் அமைந்துள்ள ஆளுனரின் வாஸஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெறறுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனைப் பற்று, மற்றும், கோறளைப்பற்று வடக்கு, ஆகிய 5 உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய தவிசாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சீரானதான இல்லை.
இதனால் அவர்கள் மக்கள் சேவைகளை மேற்கொள்வதற்கும், தூரப் பிரயாணங்களை மேற்கொள்வதற்கும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களுக்குரிய வாகன வசதிகளைச் செய்து தருமாறு ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
உடனடியாக இவர்களுக்குரிய வாகனங்களை வழங்குவதற்கு அவ்விடத்திலேயே அதிகாரிகளுக்கு ஆளுனர் உத்தரவிட்டதாகவும், மிக விரைவில் உரிய பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என ஆளுனர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மேலும் தெரிவித்தார்.