(ஊடகப்பிரிவு)
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி வந்து சேர்ந்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் இந்த தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஜனாதிபதி கடந்த வாரம் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் என்னையும் அழைத்து உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
ஜனாதிபதியினதும், பிரதமரினதும் வழிகாட்டலில், பிரதமரின் செயலாளரின் தலைமையில் உயர்மட்ட அமைச்சரவைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடி பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 500 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை குறைத்து எனது அமைச்சின் கீழான லங்கா சதொசவில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை விலைக்கழிவு அமுலில் இருக்கும்.
அத்துடன், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும், ரயில்வே நிலையங்களிலும், அரச நிறுவனங்களிலும் முடியுமான வரை சதொச விறபனைக் கிளைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறோம்.
அத்துடன் தனியார் முகவர்களுடனும் சதொச கிளைகளை ஆரம்பிப்பது குறித்து கலந்தாலோசித்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
லங்கா சதொசவில் ஒரு கிலோ அரிசி 74 ரூபாவுக்கு விற்பனை செய்யவும், நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள மொத்த வியாபார நிலையங்களில் ரூபா 74 க்கு ஒரு கிலோ அரிசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசியையும், உள்நாட்டு அரிசியையும் கலந்து விற்பனை செய்யும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் எனவே, அவற்றைத் தவிர்க்கும் வகையில் அரிசிக்கான ஆகக் கூடிய உச்ச சில்லறை விலையை நீக்குமாறும் மொத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே, உச்ச சில்லறை விலை நீக்கப்பட்டது. எனினும், சந்தையில் அரிசியின் விலையை கண்டபடியும், மனம்போன போக்கிலும் எழுந்தமானமாக வியாபாரிகள் விற்கத் தொடங்கியுள்ளனர்.
நுகர்வோர் மீதான இந்த அநியாயம் குறித்து மொத்த வியாபாரிகளை அழைத்து நாம் பேச்சு நடத்தியிருக்கின்றோம். இவர்கள் இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காக இரண்டு வார காலக்கெடுவைக் கேட்டிருக்கின்றார்கள். தந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றா விட்டால் இம்மாத இறுதியில் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை மீண்டும் அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சதொசவில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தெங்கு அபிவிருத்திச் சபை எமக்கு வழங்கும் அத்தனை தேங்காய்களையும் ஒரு சதமேனும் இலாபமின்றி நாம் விற்பனை செய்து வருகின்றோம். லங்கா சதொச நகரங்களை மையாமாக வைத்தே தற்போது தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றது. எனினும் தேங்காய் அதிகமான அளவில் எமக்குக் கிடைக்கப் பெற்றால் நாடு பூராகவும் இதனை விஸ்தரிக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
லங்கா சதொச கிளையில் வெள்ளை நாடு 65 ரூபா, வெள்ளைச் சம்பா 90 ரூபா, நாடு 74 ரூபா, வெள்ளைச் சீனி 107 ரூபா, சிவப்பு பருப்பு 152 ரூபா, நெத்தலி 99 ரூபா, பெரிய வெங்காயம் 134 ரூபா, உருளைக்கிழங்கு 125 ரூபா, டின்மீன் (425 கிரேம்) 129ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் நீல் ரஞ்சித் அசோக, சதொச நிறுவனத் தலைவர் தென்னகோன், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைவர் ரிஸ்வான், மேலதிக செயலாளர் சீதா சேனாரத்ன, தெங்கு அபிவிருத்தி சபை தலைவர் கபில யகந்தாவல, சதொச பிரதம நிறைவேற்று அதிகாரி பராஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.