ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர், முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உட்பட்ட 11 கட்சிகளின் உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இடைக்கால நிர்வாக யோசனையை முன்வைத்திருந்தனர்.
முன்னதாக இந்த யோசனையை ஜனாதிபதி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. யோசனையின்படி பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட்ட அமைச்சரவை விலக வேண்டும் என்பதே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
எனினும் அரசியல் சூழ்நிலை மாற்றத்தின் கீழ் தற்போது இதற்கான சந்திப்புக்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.