இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக இருப்பவர் விராட் கோலி. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் கிரிக்கெட் மற்றும் விளம்பரங்களால் கோடிக்கணக்கான பணத்தை குவித்து வருகிறார்.
தொண்டு நிறுவனம் நடத்தி உதவி வரும் விராட், கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் தொடரில் கோவா அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
தற்போது அவர் 34 கோடி ரூபாயில் மும்பையின் பிரபலமான வோர்லி பகுதியில் ‘பிளாட்’ ஒன்று வாங்கியுள்ளார். இந்த பிளாட் 7171 சதுர அடி அளவுடைய வீடாக அபார்ட்மென்டின் 39-வது மாடியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த பிளாட் இன்னும் முழுமையாக கட்டப்படவில்லை. ஆடம்பரமாக ஐந்து பெட் ரூம் கொண்ட பிளாட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
34 கோடி ரூபாய்க்கு வாங்கினாலும், உடனடியாக இந்த வீட்டில் கோலி குடியேற முடியாது. 2018-ம் ஆண்டுதான் கோலியின் கைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதே அபார்ட்மென்டில் 29-வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டை யுவராஜ் சிங் வாங்கியுள்ளார்.