கட்டுரைகள்பிரதான செய்திகள்

ஜனாசா நல்லடக்கமும் சில யதார்த்தங்களும்

வை எல் எஸ் ஹமீட்

அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டபோதும் இலங்கைக்கெதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையி்ல் “எரிப்பு விடயம்” உள்ளடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமென அரசு எதிர்பார்க்கிறது. அதேநேரம் ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இன்றியமையாததாக அரசு கருதுகிறது.

இந்தப்பின்னணியில் இரணைதீவில் அடக்கம்செய்வதற்கு எதிர்ப்புக் கிழம்பிய நிலையில் சுமூகமாக அடக்கம் நடைபெறுகிறது; என்பதை ஜெனீவாவிற்கு காட்டவேண்டியதேவை அரசுக்கு இருக்கிறது. இந்தப்பின்னணியே இன்று அடக்கம் சுமூகமாக இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த விடயத்தை சர்வதேச சமூகத்தின் அவதானத்திற்கு கொண்டுசென்றதில் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம் டயஸ்போராக்களின் பங்கு அளப்பரியது. குறிப்பாக Muslim Council of London மிகமுக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

அதேநேரம் P2P யும் சர்வதேச அவதானத்தை ஈர்ப்பதில் பிரதான பங்கினை வழங்கியிருக்கிறது. சிலர் P2P இற்கான முஸ்லிம்களின் ஒத்துழைப்பை வைத்து இரு சமூகமும் அரசியலில் ஒன்றுபட்டுவிட்டது; போலவும் இரணைதீவில் அடக்கத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் P2P இல் ஒன்றுபட்டவர்கள் பிரிந்துவிட்டார்கள்; என்றெல்லாம் கருத்துக்களைப் பதிவிடுகின்றனர்.

P2P என்பது சிலவேளை தமிழ்-முஸ்லிம் அரசியல் ஒற்றுமைக்கான ஆரம்பப்படியாக இருக்கலாம். ஆனாலும் அவ்வாறான ஒற்றுமை என்பது நீண்ட தூரம் பயணித்து சாதிக்கவேண்டிய ஒன்று. தமிழர்கட்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பல அரசியல் முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் வட கிழக்கு இணைப்பு, கல்முனை விவகாரம் என்பன ஒரு சில உதாரணங்கள் மாத்திரம்தான்.

பிரச்சினைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவைகளெல்லாம் தீர்க்கப்பட்டு ஓர் ஒற்றுமை நிலைப்பாடு அண்மைக்காலத்தில் ஏற்படுமா? என்பது எதிர்வுகூற சற்று கடினமானது. ஆனால் அவ்வாறான ஒற்றுமை என்பது வேறு; பொதுவான பிரச்சினைகளில் இணைந்துபோராடுவதென்பது வேறு. பலர் இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பமுற்படுகிறார்கள்.

சுமார் ஒரு வருடமாக பறிக்கப்பட்ட நல்லடக்க உரிமை மீண்டும் கிடைத்தது; அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் கருணை. வெளிப்படையி்ல் அதன் பிரதான காரணமாக ( சபப்) அமைந்தது ஜெனிவா பிரேரணையாகும். இந்த ஜனீவா பிரேரணை என்பது தமிழர்களின் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாகும்.

இந்தப் பிரேரணை வெற்றிபெற்றாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அடைவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. குறிப்பாக பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள சீனாவின் ஆதரவு இலங்கைக்கு மிகப்பெரும் பலமாகும்.

இங்கு இரண்டு வகையான விடயங்கள் இருக்கின்றன. ஒன்று “International Jurisdiction”, அடுத்தது “Universal Jurisdiction “ இதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பது முதலாவது வகையின்கீழ் வருவது. இரண்டாவது வகை, ஒவ்வொரு நாடும் குறித்த குற்றங்கள் தங்கள் நாடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்கள் போன்று நடவடிக்கை எடுப்பது.

இதில் முதலாவது வகை நான்கு குற்றங்களையே உள்ளடக்குகின்றன. அதாவது; genocide, war crimes, crimes against humanity, aggression என்பனவே அவையாகும். இந்த நான்கைத் தவிர வேறு எந்தக் குற்றங்களையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல முடியாது.

இரண்டாவது வகையில் இந்த நான்குடன் சேர்த்து இன்னும் பல குற்றங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த இரண்டாவது வகை மறைமுகமாக குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலும் அந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இப்பிரேரணை தோற்கடிக்கப்படுவதென்பது அரசுக்கு மிகவும் முக்கியமாகும். பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் இரண்டாவது வகையை ( Universal Crimes under Universal Jurisdiction) அமுல்படுத்துவதற்கு அது தடையல்ல; என்றபோதும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் நடைமுறையில் அரசியல்ரீதியாக இந்த இரண்டாவது வகையை அமுல்படுத்துவதற்கான வீரியத்தைக் குறைக்கும்.

அதேநேரம், அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் முதலாவது வகை ( International Jurisdiction- ICC) என்பதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்தப் பின்னணியில் ஆரம்பத்தில் இப்பிரேரணை தொடர்பாக சற்று அலட்சியப்போக்குடனும் இறுமாப்புடனும் செயற்பட்ட அரசு, தற்போது இப்பிரேரணையின் பாரதூரத்தை உணர்ந்திருப்பதுபோல் தெரிகிறது. அதனால் பிரேரணையை தோற்கடிக்க, தற்போது சாத்தியமான சகலதையும் செய்ய அரசு முனைகிறது.

அந்த வரிசையில்தான் இந்தியாவை சமாளிப்பதற்காக மாகாணசபைத் தேர்தல் அறிவிப்பை விடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. ஏனெனில் 13 வது திருத்தத்தை அமுல்படுத்தும் விடயமும் பிரேரணையில் இடம்பெற்றுள்ளது.

சுருங்கக்கூறின் அரசுக்கெதிரான ஜெனீவா பிரேரணை என்பது ஜனாசா எரிப்பு முடிவுக்கு வந்ததில் பிரதான பங்கு வகிக்கின்றது.

இந்த ஜனீவா பிரேரணை என்பது முஸ்லிம்களுக்காக கொண்டுவரப்பட்டதல்ல. தமிழர்களின் நீண்டபோராட்டத்தின் விளைவு. அதில் முஸ்லிம்களின் ஜனாசா விவகாரமும் இணைக்கப்பட்டது.

எனவே, தமிழர்களின் போராட்டம் இவ்விடயத்தில் முஸ்லிம்களின் ஒரு தீர்வுக்கு வழிசமைத்திருக்கிறது. அதேநேரம் தமிழர்களுடன் இணைந்து P2P இல் முஸ்லிம்கள் பங்கேற்றது முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்ல மேலும் உதவிய அதேவேளை, முஸ்லிம்களும் இணைந்தார்கள் என்பது தமிழர்களின் போராட்டம் இன்னும் வலுவான பேசுபொருளாக மாற காரணமாக அமைந்துள்ளது.

பல ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளில் முஸ்லிம்களின் P2P பங்குபற்றுதல் ஓர் வரலாற்றுத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, P2P போராட்டத்தால் இரு தரப்பும் பயன்பெற்றுள்ளது.

குறிப்பாக, பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ்ப்பிரதிநிதிகளின் எரிப்பிற்கெதிரான பலமான குரல், சொந்தப்பிரதிநிதிகளும் சோரம்போனதால் குரலற்றிருந்த ஒரு சமூகத்தின் அவல நிலைமீது ஏற்பட்ட அனுதாபமாக இருந்திருக்கலாம் அல்லது அர்த்தபுஷ்டி உள்ளதாக இருந்திருக்கலாம் அல்லது இரண்டுமாக இருந்திருக்கலாம்.

அர்த்தபுஷ்டி என்பது: தமிழ்தரப்பு கோரும் ஜனீவா பிரேரணை என்பதன் அடிப்படையே ‘மனித உரிமை மீறல்’ என்பதாகும். அந்நிலையில் ஜனாசா எரிப்பு விடயம் இந்த அரசு யுத்தகாலத்தில் மட்டுமல்ல, தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது; என்பதோடு, யுத்தகாலத்தில் தமிழர்களின் மனித உரிமை மீறப்பட்டது; என்ற நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு கொண்டுசென்றவர்கட்கு தற்போது முஸ்லிம்களின் மனித உரிமையும் மீறப்படுவதன்மூலம் மனித உரிமை மீறலை இவ்வரசு இன்னும் விரிவுபடுத்தித் தொடர்கிறது; என்ற அரசுக்கெதிரான எதிர்மறை செய்தியை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வது என்பதாகும்.

அந்த விடயத்தில் தமிழ்த்தரப்பு வெற்றிபெற்றிருக்கிறது. முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பிரேரணைக்கு ஆதரவாக இழுத்தெடுப்பதற்கான ஒரு முயற்சியாகவும் அது அமைந்திருக்கிறது.

குறிப்பாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டின் செயலாளர் நாயகத்தின் ஜெனிவா உரை அரசை தீர்வு வழங்குவதில் துரிதப்படுத்திய ஒன்று எனலாம்.
எனவே, தமிழர்கள் முஸ்லிம்களுக்காகப் போராடியதாக முஸ்லிம்களிடத்திலும் ஓர் நல்லெண்ணத்தை உருவாக்கிய அதேவேளை, ஜெனிவா பிரேரணையப் பலப்படுத்துவதற்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

அதேநேரம், முஸ்லிம் அரசியலும் ஊனமுற்றுப்போன நிலையில் தமிழர்களின் போராட்டதில் முஸ்லிம்கள் தமக்கான ஓர் தீர்வைப் பெற்றுக்கொண்டார்கள்; அல்ஹம்துலில்லாஹ்.

அதேநேரம் உள்நாட்டில் முஸ்லிம் தலைவர்கள், குறிப்பாக இரு பிரதான முஸ்லிம்கட்சித் தலைவர்கள் சில பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள்; என்பது மறுப்பதற்கில்லை. குறிப்பாக சகோ ரவூப் ஹக்கீமின் இரணைதீவு எதிர்ப்பு அறிக்கையும் இரணை தீவில் இருந்து வேறு இடங்களுக்கு நல்லடக்க அனுமதி இடம் மாறியதற்கு ஒரு காரணமாகும். அதற்காக அவர் பாரட்டப்பட வேண்டும்.

ஆனாலும் அவ்விரு தலைவர்களும் எரிப்பு விடயத்தில் ஏதோ ஓரளவு பங்களிப்பைச் செய்தபோதிலும் அவர்கள் போதுமான பங்களிப்பைச் செய்யவில்லை; என்பதை மிகக்கவலையுடன் பலமாக இந்த இடத்தில் பதவுசெய்ய விரும்புகிறேன்.

உதாரணமாக, இன்று முஸ்லிம்நாடுகளின் ஆதரவை அரசு எதிர்பார்த்திருக்கும் நிலையில் ரவூப் ஹக்கீம் போன்றோரின் அறிக்கைகள் இன்றைய ஜெனிவா பிரேரணை சூழ்நிலையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இரணை தீவிற்கெதிரான அவரது அறிக்கை, வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் நல்லடக்கத்தை இலங்கை அரசு முழுமையாக அமுலுக்கு கொண்டுவரவில்லை; என்பதுவே ஜெனிவாவிற்குப் வழங்குகின்ற செய்தியாகும். அதுதான் மாற்று இடங்களுக்கான அனுமதியை அவசர அவசரமாக வழங்க அரசைத் தூண்டியது; எனலாம்.

எனவே, இவர்கள் இந்தப் போராட்டம் தொடர்பில் இன்னும் எவ்வளவோ செய்திருக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் பாராளுமன்றத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஏதாவது பேச்சு, சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்யும் போராட்டத்தில் ஏதோ தலையைக்காட்டுதல், அதற்கு மேலதிகமாக இவ்வாறு இரண்டோர் அறிக்கை. , இவைகளுடன் முஸ்லிம் தலைமைகள் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனோ தானோ என்று இருப்பது தலைமைகளுக்கு நல்லதல்ல.

ஆரம்பமுதல் இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டியவர்கள். ஏதோ டயஸ்போராக்களின் பங்களிப்பாலும் தமிழர்களின் போராட்டத்தாலும் நமக்கும் ஓர் தீர்வு கிடைத்தது; அல்ஹம்துலில்லாஹ்.

எதிர்காலத்திலாவது இத்தலைவர்கள் சற்று அதிகூடிய அக்கறையுடன் செயலாற்றவேண்டும். அதேநேரம், இந்த போராட்டத்தில் அல்ஹம்துலில்லாஹ் கிடைத்த வெற்றியினால் ஒரேயடியாக ஒரு பக்கம் சாயும் நிலையும் நமக்கு நல்லதல்ல. அதற்காக, தமிழ் மக்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றபோது அவர்களுக்காக குரல்கொடுப்பதோ அல்லது பொதுவான பிரச்சினைகளுக்காக இணைந்து ஜனநாயக வழியில் போராடுவதோ தவறல்ல.

நாம் இரு சமூகங்களுக்கு மத்தியில் நடுநிலைச் சமூகம் என்ற எமது வழமையான நிலைப்பாடு தொடர்ந்தும் நமது அடிப்படையாக இருக்கவேண்டும்.

மறுபுறம், அரசுக்குள் இரு வகையான பிரிவுகள் இருப்பதாக தற்போது பார்க்கப்படுகிறது. ஒன்று: கடும்போக்குவாதிகள், அடுத்தது மிதவாதிகள். அடுத்த தேர்தலையும் இனவாத கோசத்தில் வெற்றிபெற முடியாது. சிறுபான்மைகளின் ஆதரவு தேவை; என்ற யதார்த்தத்தை மிதவாதப்போக்குடையவர்கள் உணர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

எதிர்காலத்தில் கடும்போக்குவாதிகளின் கையோங்குமா? மிதவாதிகளின் கையோங்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் தொடர்ந்தும் அணிசாரா நிதானப்போக்கைக் கடைப்பிடிப்போம், இன்ஷாஅல்லாஹ்.

Related posts

இன்று கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான கூட்டம்

wpengine

தமிழ், முஸ்லீம், சிங்கள, வடக்கு – தெற்கு ஊடகவியலாளா்கள் இன ஜக்கிய ஒன்றினைவு

wpengine

3ஆம் திகதி 20வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில்

wpengine