எம்.எஸ்.எம்.ஸாகிர்
இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் போராட்டத்தில் அன்று மூத்த முஸ்லிம் தலைவர் கலாநிதி ரீ.பி. ஜாயா எடுத்த நிலைப்பாடு காரணமாக இலங்கைக்கு இலகுவாக சுதந்திரம் பெற முடிந்தது. பிரித்தானியர் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை ஏற்க முற்பட்டபோது கலாநிதி ஜாயா, எங்களுக்கு சுதந்திரம் தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் பேசியதன் காரணமாக இலங்கைக்கு தாமதிக்காது சுதந்திரத்தை வழங்க பிரித்தானியர் நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
வியாழனன்று (04) காலை அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சம்மேளனம் இணையவழியாக ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சம்மேளனத் தலைவர் அஹமட் ஸாதிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் பேசிய அமீன் கூறியதாவது,
நாங்கள் இன்று சுதந்திர தினத்தை மிக சந்தோசமாகக் கொண்டாடுகின்றோம். சுதந்திரம் என்பது எங்களின் முழுநாட்டு வாழ் மக்களுக்குமான சுதந்திரம். இது அரசாங்கத்துடையது அல்ல. ஆகவே சிலர் இந்த சுதந்திரத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த சுதந்திரம் எங்களுடைய மூதாதையர்களும் சேர்ந்து பெற்ற சுதந்திரம் என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது.
அன்று கலாநிதி ஜாயா, 1942 ஆம் ஆண்டு அரசாங்க சபையிலே உரையாற்றும்போது,
எங்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளுக்காக சுதந்திரத்துக்கு நாங்கள் நிபந்தனைகளை வைக்கத் தயாரில்லை. சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த உரைக்கு முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
முஸ்லிம்கள் தங்களுக்கு நெருக்கடியாக இருந்தபோதும் சுதந்திரத்துக்காக அவர்கள் இருந்த நிலைப்பாட்டை வரவேற்றிருந்தனர். இங்கே மிக முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், இந்த நிலைப்பாட்டை முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் எடுக்காது இருந்திருந்தால் சில நேரம் இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பது தாமதப்பட்டிருக்கும். பாகிஸ்தான் இந்தியா பிரிந்தது போன்று சில நேரம் இலங்கையிலே ஒரு பகுதி பிரிக்கப்பட்டிருக்கலாம்.
முஸ்லிம்களுடைய இந்த நிலைப்பாட்டை பெரும்பான்மையினர் சமூகம் மிகப் பெறுமதியாக உணரவேண்டும்.உண்மையிலேயே இன்று அந்த உணர்வு குறைந்திருப்பது குறித்து முஸ்லிம் சமூகம் கவலைகொண்டிருக்கிறது. இந்த நாடு பிரிந்திருந்தால்இந்த நாட்டினுடைய நிலைமை வேறாக இருந்திருக்கும்.
சுதந்திர தினத்தன்று அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சம்மேளனம் நாடளாவிய ரீதியில் மரம் நடும் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கின்றது. முஸ்லிம் சமூகத்துடைய எதிர்காலத் தலைவர்களான பட்டதாரி மாணவர்களுடைய போக்கு எங்களுக்குத் திருப்தியாக இருக்கின்றது. அவர்கள் எது தேவையோ அதனை உணர்ந்து செய்கிறார்கள். அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வகுப் சபைத்தலைவர் சப்ரி ஹலீம்தீன், அகில இலங்கையின் வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைவர் சஹீட் ரம்ஸி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இணையவழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களும், உயர்கல்வி வகுப்பு மாணவர்களும் இந்த மரம்நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.