Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கையில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றார்கள் எனவும் அவர்களால் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யாமல் இருக்கின்றார்கள் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மன்னாரில் இன்று (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

“பொருளாதார நிதி நெருக்கடியால் இலங்கை மக்கள் படும் துன்ப துயரங்களை பார்த்து தமிழக உறவுகளால் எங்களுக்கு வழங்கிய அந்த உதவி நிச்சயமாக நினைத்து பார்க்க முடியாத இதுவரை எந்த நாடுகளும் அமைப்புகளும் எமக்கு அள்ளி தராத பெரிய தொகையை தமிழக மக்கள் ஒன்று சேர்த்து தந்திருக்கிறார்கள்.

அதற்கு முதற்கண் நாங்கள் நன்றியை கூறிக் கொள்ள விரும்புகிறோம். இது இன்று நேற்றல்ல பல வருடங்களாக யுத்த காலத்தில் இருந்து இதை செய்து கொண்டிருக்கிறார்கள். எமக்கு அதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

ஆனால் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது கட்சி தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினராக 225 பேர் இங்கு இருக்கிறார்கள். இந்த அன்பளிப்பை அல்லது உதவியை பெற்று ஊடகம் வாயிலாக மகிழ்ச்சிகளையும் நன்றிகளையும் தெரிவிக்கும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சி சார்ந்த அல்லது தாங்கள் சார்ந்த நிதியை இந்த அரசுக்கும் மக்களுக்கும் அவர்களால் வழங்க முன்வரவில்லை ஏன்?

நிச்சயமாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது அவர்களுடைய இன்றைய சொத்துக்கள் எங்கிருந்து சேர்த்தார்கள் ? உண்மையில் அரசியல் வாயிலாகத்தான் இந்த சொத்துக்களை அவர்கள் தேடி இருப்பார்கள்.

எனவே இன்று இலங்கையின் அவல நிலையை பார்த்து பொருளாதார நெருக்கடியை பார்த்து இந்தியா தமிழக மக்களும் உதவும் போது ஏன் இங்கு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு ரூபாய் கூட உதவி செய்ய முடியவில்லை.

நிச்சயமாக இவர்களிடம் நிதி இருக்கிறது. கட்சி சார்ந்த பணங்களும், கோடிக்கணக்காக இருக்கிறது, இவை கட்சி தலைமையகங்களில் அல்லது வங்கிகளில் தனிநபர் மூலம் அந்த சொத்துக்கள் முடங்கிப் போய்க் கிடக்கிறது. இன்றைய சூழலில் கூலி வேலை செய்யும் மக்கள் சாப்பாட்டுக்காக படும் துன்பத்தை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர்கள் நாடாளுமன்ற உணவை உண்டு கொண்டு ஏசி அறையில் சுகபோகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் ஒருவேளை கஞ்சி குடிப்பதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள். மா, சீனி உட்பட எந்த பொருளை எடுத்துக் கொண்டாலும் மூன்று மாதத்திற்கு முன் இருந்த நிலையை ஒப்பிடும்போது 3 மடங்கு விலை உயர்ந்து உள்ளது.

எனவே நான் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. நிச்சயமாக தங்களால் முடிந்த நிதியை இக்கட்டான பொருளாதார நெருக்கடி சூழ் நிலையில் மக்களுக்காக வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இவ் ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் ஜஸ்ரின் சொய்சா, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொருளாளர் அன்ரனி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *