Breaking
Mon. Nov 25th, 2024

20 வது திருத்தம் தொடர்பான சில விளக்கங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். இத்திருத்தம் ஜனநாயக விரோதமானது என்பதனையும் அதில் தெரிவித்திருந்தேன். அதில் பிரதானமாக ‘ by reason specified in any law ‘ – ஏதாவது சட்டத்தில் குறிப்பிட்டதன் காரணமாக’ என்ற ஒரு சொற்றொடர் எதிர்காலத்தில் ஒரு சாதாரண சட்டத்தை கொண்டுவந்து மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகின்றது; என்பதை அதில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த சொற்கள் மாற்றப்படவில்லை. இறுதியாக நடைபெற்ற மாகாணசபை ( ஊவா மாகாணசபை) யின் இறுதித்திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு திகதி என்பதற்குப் பதிலாக முதலாவது தெரிவு சய்யப்பட்ட மாகாணசபையின் ( கிழக்கு மாகாண சபையின்) இறுதித்திகதியிலிருந்து 12 மாதங்களின் முடிவில் சகல மாகாணசபைகளும் கலைந்து விடும்; என்று திருத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, 2019 வரை நீடிக்கப்பட இருந்த வாய்ப்பு 2018 இற்கு சுருக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது மாகாணசபை கலைகின்ற திகதியை பாராளுமன்றம் தீர்மானிப்பதற்குப் பதிலாக ஒரு வருட முடிவில் தாமாக கலையப்போகின்றது.

ஜனநாயக கோணத்தில் பார்த்தால் முன்னையதை விட இத்திருத்தம் சற்று முன்னேற்றகரமானது.

முஸ்லிம்களின் பார்வையில் இதன் சாதக பாதகமென்ன?
———————————————

எனது கடந்த ஆக்கத்தில் இந்தக் கோணத்தைத் தொடவில்லை. அது ஒரு objective analysis மாத்திரமே.

மாகாணசபை அதிகாரம் என்பது முஸ்லிம்களுக்கு பாதகமானது. பலர் இதை இன்னும் புரியாவிட்டாலும் என்றோ ஒருநாள் புரிந்து கொள்வார்கள். அதேநேரம் இன்று இருக்கின்ற மாகாணசபைக்கு பெரிதாக அதிகாரம் இல்லாததினால் அதன் தாக்கத்தை இன்னும் நாம் உணரவில்லை.

புதிய திருத்தத்தின்படி மொத்தமாக கலைப்பதற்குரிய திகதியைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் பாராளுமன்றத்திக்கு வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றதே தவிர சாதரண சட்டமொன்றைக் கொண்டுவந்து கலைக்கின்ற அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படுகின்றது. எனவே மாகாணசபையின் மூக்கணாங்கயிறு கடந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல் மத்திய அரசிடம் இருக்கப் போகின்றது.

இன்று அதிகாரம் இல்லாத மாகாணசபை என்பதனால் இது பெரிய நேரானதோ அல்லது எதிர்மறையானதோ ஆன தாக்கமொன்றை முஸ்லிம்களைப் பொறுத்தவரை செலுத்தப் போவதில்லை. ஆனால் அதிக பட்ச அதிகாரம் வழங்கப்பட்டால் மத்திய அரசிடம் மூக்கணாங்கயிறு இருப்பது சற்று ஆறுதலாகும். ஆனால் புதிய யாப்பில் அதிக பட்ச அதிகாரம் வழங்குகின்ற போது இவை எல்லாம் மாற்றப்பட்டு விடும். எனவே இத்திருத்தம் தேர்தலுக்கு செல்ல அஞ்சுகின்ற அரசுக்கு ஒரு வருடம் ஆறுதல் கொடுப்பது மாத்திரமே. முஸ்லிம்களைப் பொறுத்தவரை உப்புச்சப்பு இல்லாத திருத்தம்.

அதே நேரம் ஒரு மாகாணசபை நிராகரித்தாலும்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஏற்கனவே சில மாகாணசபைகள் நிராகரித்து விட்டன. எனவே, கிழக்கு மாகாணசபை ஆதரித்தாலும் நிராகரித்தாலும் அது எதுவித தாக்கமும் செலுத்தப் போவதில்லை.

மறுபுறத்தில் இத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு மாகாணசபைக்கு இன்னும் ‘ஓராண்டு’ ஓசியில் கிடைக்கப் போகின்றது. அதற்கு நன்றிக்கடனாக, இத்திருத்தத்தை ஆதரித்து ஒரு ஆதரவு செய்தியை வழங்குகின்றது; அவ்வளவுதான்.

எனவே மாகாணசபை முஸ்லிம்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதில் மத்திய அரசு கைவைக்க இடமளிக்கலாமா? என்ற தோரணையில் விமர்சிப்பவர்கள் தயவு அதிகப்பட்ச அதிகாரம் வழங்கப்பட்டால் மாகாணசபை முஸ்லிம்கள் மீது செலுத்தப் போகின்ற எதிர்மறைத் தாக்கம் பற்றி சற்றுப்படியுங்கள். அரசியலுக்காக நமக்கு எதிரானதை நல்லது என்று அறியாத்தனமாக எழுதாதீர்கள்.

அதேநேரம் இந்த கிழக்கு மாகாண ஆட்சியாளர்களும் அவர்களது கட்சிகளும் ( த தே கூ, மு கா) இரண்டும் அதிகப்பட்ச அதிகாரம் கேட்பவர்கள். அவ்வாறு கேட்பவர்கள் இதற்கு எவ்வாறு ஆதரவளித்தீர்கள்? உங்களுக்கு ஒரு ஆண்டு போனஸ் ஆக கிடைக்கின்றது என்பதற்காகவா? என்ற கேள்வியை விரும்பினால் எழுப்புங்கள். மாறாக முஸ்லிம்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

(வை எல் எஸ் ஹமீட்)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *