Breaking
Mon. Nov 25th, 2024

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

ஒரு சிறு கட்சியானது தேசிய கட்சிகளுடன் மூன்று வகையான அரசியலை கைக் கொள்ளலாம். அவைகளை உடன்பாட்டு, முரண்பாடு, ஒப்பந்த அரசியல் என கூறலாம். இவற்றில் உடன்பாட்டு அரசியலை செய்பவர்களால் ஒரு போதும் குறித்த தேசிய கட்சியுடன் முரண்பட்டு செல்ல முடியாது. முரண்பாட்டு அரசியலை கடைப்பிடிக்கும் ஒரு கட்சியினால் தேசிய கட்சிகளிடமிருந்து இலாபங்களை பெற்றுக்கொள்ள முடியாது. ஒப்பந்த அரசியலை கடைப்போடிக்கும் ஒரு கட்சியினால் தேவையான நேரத்தில் உடன்பாட்டு அரசியலையும், தேவையான நேரத்தில் முரண்பாட்டு அரசியலையும் செய்யலாம். இந்த மூன்று வகைகளில், தற்போதைய சூழ் நிலைகளில் ஒரு முஸ்லிம் கட்சிக்கும் ஒப்பந்த அரசியலே மிகவும் பொருத்தமானதாகும். அமைச்சர் ஹக்கீம், தாங்கள் ஒப்பந்த அரசியலை செய்வதாக கூறிய சந்தர்ப்பங்களும் உள்ளன.

ஒப்பந்த அரசியலை கடை பிடிக்கும் ஒரு கட்சியை ஒரு தேசிய கட்சி ஒரு போதும் வளர்க்க சிந்திக்காது. அவைகள் தனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இயன்றளவு பேரம் பேசி தேசிய கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியதை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி பல சந்தர்ப்பங்கள் வரும். அப்படியான ஒரு சந்தர்ப்பமாக 20ஐ தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தியதாக கூறுகிறது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் “ சமஸ்டி, வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே தாங்கள் 20ஐ ஆதரிக்கின்றோம் ” என கூறியுள்ளார். இந்த அரசு தங்களை முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்து பாதுக்காத்துக்கொள்ள சில கால இடைவெளி தேவை. அதற்கு எதை எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்கிறது. இவ்விடத்தில் ஒரு சிறிய பேரம் பேசும் சக்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் இது தொடர்பில் மு.கா எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்ததாக அறிய முடியவில்லை. இது வரை யாரும் எதையும் கூறவுமில்லை. அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் தொடர் மௌனத்தையே பேணுகிறார். இது தொடர்பில் த.தே.கூவால் ஒப்பந்தம் செய்ய முடியும் என்றால், ஏன் மு.காவினால் ஒப்பந்தம் செய்ய முடியாது? இதனை செய்துள்ளோம் என்ற பொய்யையாவது (பொய் ஹராம் என்பதாலா? ) ஏன் கூற முடியாதுள்ளது? ஏதேனும் கேட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வந்துவிடுவார் என கிழக்கு முதலமைச்சர் உட்பட மு.காவினர் காரணம் கூறுகின்றனர். இப்படியான விடயங்களில் மு.கா, அரசுக்கும் இன்னும் சிலருக்கும் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வேறு ஏதோ ஒன்றை சாதிக்க முனைவதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். இதனை விட பெரும் சான்றுகள் தேவையே இல்லை. அண்மையில் மு.காவின் முன்னாள் செயலாளர் ஹசனலி மு.கா பலமான ஒப்பந்தம் செய்யாமையின் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வேட்பு மனுத் தாக்கலின் போது, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் முன் நின்றுகொண்டு இழித்துக் கொண்டிருந்ததாகவும், இதுவே குருநாகலையில் ரிஸ்வி ஜவஹர்சாவை நிறுத்தத் முடியாமல் போனமைக்கான காரணமாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுவெல்லாம் மு.கா விசுவாசத்தை வெளிப்படுத்தி உடன்பாட்டு அரசியல் போக்கை கடைப் பிடிப்பதற்கான சான்றுகளாகும்.

இங்கு த.தே.கூ, அரசுடன் ஒப்பந்தம் செய்திருக்குமா என்பது பல விமர்சனங்களுடைய ஒரு பகுதியாகும். அந்த அடிப்படையில் இல்லாவிட்டாலும் இவ்வரசுக்கும் இன்னும் சிலருக்கும் கூஜா தூக்குகின்ற செயற்பாட்டை மு.கா கடைப்பிடிப்பதை இவ்விடயத்தில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். இந்த அறிந்து கொள்ளலானது மு.கா, உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து முற்று முழுதான தவறான பாதையில் செல்வதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இதனை வைத்து மு.காவானது முஸ்லிம்களின் தேவைகள், உருமைகளுக்காக குரல் கொடுக்காது என்பதை அறிந்துகொள்ளலாம். மு.கா அரசுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளிய காரணி எது? பணமா? அல்லது மு.காவினரின் பிடிகள் ஏதும் அரசிடம் உள்ளதா?

இன்று இலங்கை நாடானது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய மிக முக்கியமான கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த கால கட்டத்தில் இவற்றை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள மு.கா சிறிதளவேனும் பொருத்தமானதல்ல என்பதை இலங்கை முஸ்லிம் மக்கள் சிந்தித்துக்கொள்ள வேண்டும். மு.காவின் இதயங்களில் ஒன்றான ஒலிவிலில் இருந்தே இதற்கு எதிரான எதிர்ப்புக்கள் எழும் என நான் நினைத்திருக்கவில்லை.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *