20வது திருத்தம் சில திருத்தங்கள் சர்வஜன வாக்ககெடுப்பு தேவை! நீதி மன்றம்

நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் நான்கு உத்தேச சரத்துக்கள், நடை முறையிலுள்ள அரசியலமைப்பின் 3,4 ஆம் உறுப்புரைகளை மீறுவதாக அமைந்துள்ளதால் அவற்றை நிறைவேற்ற அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரைக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 39 விசேட மனுக்கள், அம்மனுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 20 இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனைகளை தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.


அதன்படி அதன்படி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆம் திருத்தச் சட்ட மூலத்தில் 3,5,14,22 ஆம் சரத்துக்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமானால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமில், 4க்கு ஒன்று எனும் பெரும்பான்மை அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தேச 20 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பில் 61 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின் பிரகாரம்
உத்தேச 20 ஆம் திருத்தச் சட்டத்தின் 3,5,14 மற்றும் 22 ஆம் அத்தியாயங்களை அப்படியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால், நாடாளுமன்ற மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொதுமக்கள் வாக்கெடுப்பும் அவசியமாகும். என குறிப்பிடப்பட்டுள்ளது.


உத்தேச 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தில் 3 ஆம் சரத்தானது, நடைமுறை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரியை மாற்றீடு செய்வது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள சரத்தாகும். ஜனாதிபதியின் தத்துவங்களும் பணிகளும் தொடர்பில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரை பேசுகிறது.


உத்தேச திருத்தச் சட்டத்தின் 5 ஆவது சரத்தானது, நடைமுறை அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரையை மாற்றுவது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கான விடுபாட்டுரிமை தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளன.
இதனைவிட உத்தேச திருத்தச் சட்டத்தின் 14 ஆவது சரத்தனது, நடைமுறை அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையை திருத்துவது தொடர்பிலும் ( (நாடாளுமன்றத்தை க்லைத்தல், ஒத்தி வைத்தல், கூட்டுதல் தொடர்பானது), உத்தேச 22 ஆவது சரத்து, நடைமுறை அரசியலமைப்பின் 104 ஆவது உறுப்புரையை நீக்குவது தொடர்பிலும் பரிந்துரைத்துள்ளன.


இந்நிலையில் சட்ட மா அதிபர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததைப் போன்று, 3, 14 ஆம் உத்தேச சரத்துக்களை குழு நிலை விவாதத்தின்போது திருத்தத்துக்கு உட்படுத்துவார்களாயின் அவ்விரு சரத்துக்களுக்கும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை.


எனினும் 5,22 ஆம் உத்தேச சரத்துக்களை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என உயர் நீதிமன்றின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


அதன்படி தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆம் திருத்த சட்ட மூலத்தில் 3,5,14,22 ஆம் சரத்துக்கள் தவிர ஏனைய சரத்துக்களை நிறைவேற்ற நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மை போதுமானதாகும்.


இந்தத் தீர்மானமானது பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ, விஜித் மலல்கொட ஆகிய நான்கு நீதியர்சர்களின் தீர்ப்பாகும்.
எனினும் இதற்கு மாற்றமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தின் 3,14 ஆம் உத்தேச சரத்துக்களையும் சர்வஜன வாக்கெடுப்பின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்ற முடியும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும் நீதியர்சர்கள் குழாமின் பெரும்பான்மையினரின் நிலைப்பாட்டின் பிரகாரம், உத்தேச திருத்த சட்டத்தின் சரத்துக்களான 3,5,14 மற்றும் 22 ஆகியன தற்போது முன் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நிறைவேற்றப்பட வேண்டுமானால் மூன்றிலிரண்டு விசேட நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என்பதாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares