அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட 4 அமைச்சர்களை கூட்டு தலைமைகளாக கொண்ட மீள்குடியேற்ற செயலணி அரசியல் மயப்படுத்தப்பட்டு ஒரு இனத்திற்கு மட்டும் நன்மைகளை செய்யும் செயலணியாக மாறியிருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பின் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 124ஆவது அமர்வு நேற்றையதினம் இடம்பெற்றது, குறித்த அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், றிஷாட் பதியூதீன், துமிந்த திஸாநாயக்க மற்றும் பைஷர் முஸ்தபா ஆகியோர் கூட்டு தலைமையில் வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி உருவாக்கப்பட்டது.
குறித்த செயலணியின் 3வது கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரை அடுத்த கூட்டத்திற்கு அழைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 4வது கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் நான் கலந்து கொண்டேன்.
இதன்போது 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து பேசப்பட்டது. அப்போது நாம் கூறியிருந்தோம். தனியே முஸ்லிம், சிங்களம் என பயன்படுத்தாமல் 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களை என பயன்படுத்துங்கள் என. அது அன்றைய கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் 2017ம் ஆண்டு இந்த செயலணி ஊடாக வவுனியா மாவட்டத்திற்கு 200 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 100 வீடுகளும் வழங்கப்பட்டது. அவை பூரணமாக முஸ்லிம் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் வவுனியா மாவட்டத்தில் உட்கட்டுமான பணிகளுக்கான 80 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுவும் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தனி ஒரு கிராமத்தின் உள்ளக வீதிகள் புனரமைப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த வருடம் மேற்படி செயலணி ஊடாக வடமாகாணத்திற்கு 342 வீடுகள் ஒதுக்கப்பட்டன. அதில் 50 வீடுகள் சிங்கள மக்களுக்கும், 292 வீடுகள் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக வவுனியா நகரில் வீடு தேவையாக உள்ளவர்கள் பட்டியல் ஒன்று மேற்படி செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அந்த பட்டியலில் ஒரு தமிழருடைய பெயரோ, சிங்களவருடைய பெயரோ இல்லை. தனியே முஸ்லிம் மக்களுடைய பெயர் மட்டுமே உள்ளது.
இவ்வாறே செட்டிகுளம் உள்ளிட்ட பல பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இந்தச் செயலணிக்கு 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த 15ம் திகதி நான் மீள்குடியேற்ற அமைச்சுக்கு சென்று குறித்த செயலணியுடன் பேசியிருந்தேன்.
அதன்போது முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தமிழ் மக்களையும் உள்ளீர்க்கவேண்டும் என கூறியிருந்தேன். அதற்கமைய வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்ட செயலர்களுக்கும் 17.05.2018ம் திகதி கடிதம் ஒன்று மேற்படி செயலணியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் வவுனியா மாவட்ட செயலகத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்தபோது 2 வாரங்கள் கழித்து தேடி கண்டுபிடித்துள்ளோம்.
இந்த கடிதம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எவருக்கும் எதுவும் தெரியாது. மற்றைய மாவட்டங்களில் என்ன நிலை என்பதையும் அறிய இயலவில்லை.
எனவே 1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் பகுதி கிராமசேவகர் ஊடாக இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுங்கள் என்றார்.