கட்டுரைகள்பிரதான செய்திகள்

19வது திருத்தம் தோல்வியடைந்ததா?

வை எல் எஸ் ஹமீட்


20வது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகள் தொடக்கம் பலரும் கூறுகின்ற கருத்து “19வது திருத்தம் தோல்விடைந்ததற்கான காரணம் முன்னாள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே இருந்த இழுபறியாகும்; என்பதாகும்.


இக்கருத்திற்கு காரணம் 1978ம் ஆண்டு யாப்பை பொதுவாகவும் 19ம், 20ம் திருத்தங்களைக் குறிப்பாகவும் புரிந்துகொள்ளாததே தவிர 19 ஒருபோதும் தோல்வியடையவில்லை.

முன்னாள் ஜனாதிபதி-பிரதமருக்கிடையேயான இழுபறிக்கு காரணம் 1978ம் ஆண்டைய யாப்பு அறிமுகப்படுத்திய நிறைவேற்றதுறையும் சட்டவாக்கத்துறையும் பின்னிப்பிணைந்த, அதேநேரம் வெவ்வேறான ஆட்சிமுறையேதவிர, 19 அல்ல.
20வது திருத்தம் நிறைவேறிய பின்னும் ஜனாதிபதி ஒரு புறபுறமும் பிரதமர் ஒருபுறமும் இருந்தாலும் இழுபறி வரலாம். 20வது திருத்தம் ஒருபோதும் அந்த இழுபறியைத் தடுக்கமுடியாது.


19 இற்கு முன்னும் 20 இலும் அவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதிக்கிருக்கின்ற ஒரேயொரு வாய்ப்பு பாராளுமன்றத்தை நேரகாலத்தோடு கலைக்கின்ற அதிகாரமாகும். அதனைத்தவிர 20வது திருத்தம் இன்னும் இழுபறியை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

பாராளுமன்றக் கலைப்பு அதிகாரமும் முழுமையான தீர்வு அல்ல. உதாரணமாக, ஜனாதிபதி ஒரு கட்சியில் இருக்கும்போது அடுத்த கட்சி பாராளுமன்றத்தைக் கைப்பற்றினால் அதற்கு முன்னைய பாராளுமன்றத்தை ஜனாதிபதி முன்கூட்டியே கலைக்கவில்லையாயின் பாராளுமன்றம் கூடி அடுத்தநாள் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம்.


இப்பொழுது மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெறும். மீண்டும் அதே கட்சியை மக்கள் தெரிவு செய்கிறார்கள்; எனக் கொள்வோம். இப்பொழுது ஒருவருடம் ஜனாதிபதி காத்திருக்க வேண்டும். ஒரு வருடத்தின்பின் கலைக்க மீண்டும் மக்கள் அதே கட்சியைத் தெரிவுசெய்தால் என்ன செய்வது?


மீண்டும் ஒருவருடத்தின்பின் கலைப்பதா? இத்தேர்தலுக்கான செலவுகள் மக்கள் பணமில்லையா? இது ஒரு தீர்வாகுமா? அல்லது மக்கள் ஜனாதிபதியை வெறுத்தாலும் தொடர் தேர்தலைத் தவிர்க்க ஜனாதிபதியின் கட்சியைத் தெரிவுசெய்ய வேண்டும். இது ஜனநாயகமாகுமா? இது ஒரு சரியான தீர்வாகுமா?


அவ்வாறாயின் ஆட்சி முறைமை மாறுவதற்குப் பதிலாக, மக்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்களே மாறவேண்டுமா? அல்லது மக்களின் மனோநிலை மாறி ஜனாதிபதியின் கட்சியின் பக்கம் மக்கள் திரும்பும்வரை பிரதமரின் கட்சியை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அதைத்தான் சந்திரிக்கா செய்தார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ரணிலிற்கு ஆட்சிசெய்ய சந்தர்ப்பம் கொடுத்தார். முழுமையான நிறைவேற்று அதிகாரம் தன்னிடம் இருந்தும் எந்த இடையுறும் செய்யவில்லை. ஆனால் ரணிலின் அரசு அவருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தன. ஜனாதிபதியிடம் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன? குறிப்பிட்ட வாகனங்களைத்தவிர, ஏனைய வாகனங்களை அரசுக்கு ஒப்படைக்க வேண்டுமென்றார்கள்.


இந்த அரசாங்கம் என்னை தொல்லைப்படுத்துகிறது; என்று அவர் பகிரங்கமாக கூறுமளவு அவர்களது செயற்பாடு இருந்தது. ஐ நா பொதுச்சபையில் அவர் விரும்பியபோதும் நாட்டின் தலைவர் என்ற முறையில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. மாறாக பிரதமரான ரணிலே கலந்துகொண்டார். வெளிவிவகார அமைச்சும் அவர்களிடமே இருந்தது.


ஏன்! பாதுகாப்பு அமைச்சைக்கூட திலக் மாரப்பனவுக்கு அவர் வழங்கியிருந்தார். அதனால்தான் புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்யமுடிந்தது. ( பின்னர் உயர்நீதிமன்ற ஆலோசனையைப் பெற்றுத்தான் பாதுகாப்பு அமைச்சை மீளப்பெற்றார்).
அவர் அரசியலமைப்பு ரீதியாக, முழு அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக இருந்தபோதும் நடைமுறையில் ஒரு சம்பிரதாய ஜனாதிபதியாக மாறினார்.

இவ்வாறு அவர் செயற்பட்டதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் மிகச் சிறந்த ஜனநாயகவாதியாக இருந்தார். இரண்டு, ஐ தே கட்சியை தொல்லை கொடுக்காமல் ஆட்சி செய்ய அனுமதித்து அவர்களின் பிழைகளை மக்களிடம் கொண்டுசென்று மக்களை தம்பக்கம் கவர்ந்தார்.


மூன்றாவது, நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் இருந்ததனால் ஜனாதிபதியின் நிதியைக் கட்டுப்படுத்தி ஜனாதிபதியை முடக்குவோம்; என்று அரசு பயமுறுத்தியது. இக்காரணங்களினால்தான் அவ்வாறு அச்சந்தர்ப்பத்தை சந்திரிக்கா வழங்கினார்.

மைத்திரி செய்தது என்ன?———————————-பெரும்பான்மை இருந்தும் பிரதமரை நீக்கினார். புதிய பிரதமரை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தோற்கடித்தும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்றார். இதற்கும் 19 இற்கும் என்ன சம்பந்தம். சரி, 20 கொண்டுவந்து அடுத்த பக்கம் பிரதமர் வர, அவரை சிலநாள் கழித்து ஜனாதிபதி நீக்கி புதிய பிரதமரை நியமிக்க, அவரை நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தோற்கடிக்க அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்றால் தீர்வு என்ன?


19 இன் கீழும் அது சட்டவிரோதம்தான், 20 இன் கீழும் அது சட்டவிரோதம்தான். ஆகக்குறைந்தது 19 இன் கீழ் நீதிமன்றத்தை நாடி தீர்வுபெறலாம்; 20 இன் கீழ் அதுவும் முடியாது. பாராளுமன்றத்தை மைத்திரி கலைத்தார்; நீதிமன்றம் தீர்வு வழங்கியது. 20 இன் கீழ் முடியுமா?

52 நாள் போராட்டத்தின்போது ரணில் பெரும்பான்மையைக் காட்டியும் அவரை பிரதமராக நியமிக்க நாட்களை இழுத்தடித்தார். பிரதமர் நியமிக்கும் விடயத்தில் 1978ம் ஆண்டு யாப்பில் என்ன சரத்து இருந்ததோ அதே சரத்துத்தான் 19 இலும் 20 இலும் தொடர்கிறது. இவ்வாறு பல விடயங்களைக் குறிப்பிடலாம்.
எனவே, பிழை 19 இல் இல்லை. 19 தோற்கவும் இல்லை. அன்று ஜனாதிபதி என்பவர் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறினார். 20 நிறைவேற்றப்படுகிறது; எனக்கொள்வோம். பாராளுமன்றம் அடுத்த கட்சிக்கு செல்கிறது; எனக் கொள்வோம். முதல் வருடம் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியாது.
இப்பொழுது பிரதமருடன் ஜனாதிபதி ஒத்துழைக்க மறுக்கிறார்.

இடையூறு செய்கிறார். அதற்குப் பதிலாக பிரதமர் பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியின் நிதியைக் கட்டுப்படுத்துகிறார். இப்பொழுது ஜனாதிபதிக்கு செயற்பட முடியாதநிலை தோன்றினால் என்ன செய்வது? ஒரு வருடம் முடங்கிக்கொண்டு இழுபறிப் பட்டுக்கொண்டு அடுத்த வருடம் பாராளுமன்றம் கலைக்கபடும்வரை காத்திருக்க வேண்டும்.
எனவே, 19 தோற்கவில்லை. அப்பட்டமான சட்டமீறல்தான் இழுபறியைத் தோற்றுவித்தன. அச்சட்டமீறல் 20 இன் கீழும் நடக்கலாம். சட்டமீறலைப் பொறுத்தவரை 19, 20 என்ற வேறுபாடில்லை. அது ஜனாதிபதியாக வரும் நபர்களைப் பொறுத்தது.


இதற்குத் தீர்வு பாராளுமன்றத்தை நேரகாலத்தோடு கலைக்கும் அதிகாரமுமல்ல. அதுவும் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.

தீர்வு, இந்த ஜனாதிபதி-பிரதமர் கலப்பு ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்படவேண்டும்; என்று சந்திரிக்காவின் காலம் முதல் மைத்திரியின் காலம்வரை பேசப்பட்டது. யாரும் ஒழிக்கவில்லை.


ரணிலின் ஆட்சியின் இறுதிப் பாகத்தில் அதனை ஒழிக்க ரணில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்தார். அன்றைய ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று தலைவர்களும் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கினார்கள். அம்மூவரின் ஆதரவும் இருந்தால் அதனை ஒழிப்பது சிரமமே இல்லை.

அப்பொழுது சஜித் ஜனாதிபதிக் கனவு கண்டுகொண்டிருந்தார். அமைச்சரவைப் பத்திரத்தை தோற்கடிக்க விரும்பினார். ஆனாலும் ஐ தே கட்சியின் சஜித் ஆதரவு அமைச்சர்கள்கூட வெளிப்படையாக அமைச்சரவையில் ரணிலை எதிர்க்க தயங்கினார்கள்.
பணி, நமது முஸ்லிம்கட்சித் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டுத் தேர்தலில் சிறுபான்மை ஆதரவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது; எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைகளுக்கு சாதகமானது; என்ற கருத்து தோற்கடிக்கப்பட்டுவிட்டது; மயிரிழையில் அது தவறியபோதும்கூட; என்பதைப் புரிந்துகொள்ளாத நமது அந்தத்தலைமை!
பெருந்தேசியத் தலைவர்கள் புகழ்ந்து உற்சாகப்படுத்தி விட்டால், சமூகத்திற்காக வராத உசார் அப்பொழுது தலை கால் புரியாமல் பொங்கியெழுந்துவிடும்!


அவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு, சஜித்தான் அடுத்த ஜனாதிபதி, தான்தான் உப ஜனாதிபதி என்பதுபோல் அமைச்சரவையில் முதலவதாக எழுந்து அந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு எதிராக கூச்சல்போட, அதற்கு சம்பிக்க ரணவக்க, ஒத்தாசை வழங்க, பெரும் களேபரம் ஏற்படுத்தப்பட்டு அப்பத்திரத்தின் கதை முடிக்கப்பட்டது.


அன்று ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய பெரும்பான்மை கிடைத்திருக்காது. இனவாதம் இவ்வளவு கூர்மையடைந்திருக்காது. ஜனாதிபதித் தேர்தல் இருமுனைப் போட்டி. எனவே, பெரும்பான்மையா? சிறுபான்மையா? என்ற இனவாதத்திற்கு வழிசமைக்கிறது.


பொதுத் தேர்தல் பல்முனைப்போட்டி. விகிதாசாரத் தேர்தல் சிறுபான்மையில் தங்கவைக்கும் தேர்தல். எனவே, இன்று நிலைமை மாறியிருக்கும். இன்று இந்த இக்கட்டான நிலைமைக்கு சமூகத்தைத் தள்ளுவதற்கு சஜித் மீதுகொண்ட அதீத தம்பிக்கை அந்த முஸ்லிம் தலைவரைத் தூண்டிவிட்டது.


அவர்களுக்கென்ன? சமூகம் இதையெல்லாம் புரிந்துகொள்ளவா போகின்றது? அவர்களின் வாக்குகளில் குறைவு ஏற்பட்டுவிடுமா?
எது எவ்வாறான போதிலும் கடந்த ஆட்சியின் இழுபறிக்கும் 19இற்கும் தொடர்பில்லை. அப்படியானவர்கள் 20 கீழ் வந்தாலும் இழுபறிதான் படுவார்கள்.

Related posts

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

wpengine

சிறைத்துறையில் 1,663 பணியிடங்கள் வெற்றிடம்!

Editor

சம்பூர் அனல் மின் நிலையம்! தொடர் மக்கள் போராட்டம்

wpengine