வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள எக்ஸ்ரே இயந்திரம் கடந்த ஐந்து நாட்களுக்கு மேல் பழுதடைந்து காணப்படுவதினால் தாம் பல்வேறு சிரமத்திற்குள்ளாவதாக நோயாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக தாங்கள் வைத்தியசாலைக்கு அருகில் காணப்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூபா 800 தொடக்கம் ரூபா 1000 வரை பணத்தினை செலுத்தி எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளதாகவும், பணம் இல்லாமையினால் அயலவர்களிடம் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், பணம் செலுத்தித்தான் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் எனின், மக்களுக்கு என பொது வைத்தியசாலை எதற்கு எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையில் கடந்த ஐந்து நாட்களாக எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது. அதனை சீர்செய்வதற்குரிய செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மற்றும் புதியதொரு எக்ஸ்ரே இயந்திரம் சில நாட்களில் வைத்தியசாலையில் இணைக்கப்படவுள்ளது.
ஆனால் நாங்கள் எமது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளை திருப்பி அனுப்புவதும் இல்லை தனியாரிடம் சென்று எக்ஸ்ரே எடுக்கவும் என தெரிவிப்பதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதித்து அன்புலன்ஸ் வண்டி மூலம் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று எக்ஸ்ரே எடுப்பதாகவும் மேலதிக தகவல் தேவையெனின் நோயாளிகள் தன்னை நாடுமாறும் தெரிவித்தார்.