(நன்றி சுடர் ஒளி)
மஹிந்த ஆட்சியின்போது பலமடைந்திருந்த பொதுபலசேனா அமைப்பு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் சரிவை சந்தித்திருந்த நிலையில், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு அவ்வமைப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக “மீண்டும் எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் கடந்த (03-04-2016) யூடுயூபில் பாடல் ஒன்றையும் அவ்வமைப்பு தரவிறக்கம் செய்துள்ளது. சிங்கள தேசியவாதத்தைத் தூண்டும் வகையில் பாடல்வரிகள் அமைந்துள்ளன என்ற விமர்சனம் இருக்கிறது.
இந்தப் பாடல் குறித்து “சுடர் ஒளி’யிடம் கருத்து வெளியிட்ட பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே, “”நாங்கள் ஏற்கனவே 2012ஆம் ஆண்டு பாடல் ஒன்றை தயாரித்திருந்தோம். தற்போது, இதுபோன்ற பாடல் எதனையும் நாங்கள் உத்தியோகபூர்வமாக தயாரிக்கவில்லை. நாங்கள் அடிமட்ட கிளைகளை விரிவுபடுத்தி வருகின்றோம்.
அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கியும் வருகின்றோம். சிலவேளை, எமது கிளை அமைப்புகளால் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்” என்றார்.
பொதுபலசேனாவின் தற்போதைய நிலைமை தொடர்பில் வினவியபோது, “”தற்போது நாங்கள் வவுனியாவில் உள்ள சிங்களக் கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து வருகின்றோம்.
அங்கு எமது சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? அங்குள்ள தற்போதைய நிலைவரங்கள் என்ன? ஆகியன தொடர்பில் நாங்கள் விரைவில் தெளிவுபடுத்தவுள்ளோம்” என்றார்.