பிரதான செய்திகள்

16ஆவது ஆண்டு பூர்த்தி! இணைந்த வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுடைய எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிடும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் அஷ்ரப்பினுடைய 16ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடன் நெருங்கிப் பழகியவன், அவரது அரசியல் பயணத்தில் பக்கபலமாக  இருந்தவன் என்றவகையில் அவர் எமக்கு கற்பித்த அரசியல் பாடம் இக்காலத்தில் எந்தவகையில் பொருந்தும் என்ற ரீதியிலேயே இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலிலே விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து   விட்டு விட்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது அரசியல் களத்தில் பாடுபட்ட ஒருவர் என்றால் மிகையாகாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் அவரே. கட்சியின் தலைவராக, அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர், பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சேவை செய்த சிறந்த சமூக சேவகன்.

சிங்கள, தமிழ் சமூகத்தினருடனும் தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிய தலைவர் அஷ்ரப், இன உறவுப் பாலமாகவும் இருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்  முஸ்லிம் உறவை மேலும் நெருக்கமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். என்றாலும், அவர் நாட்டுக்காகவும்  சமூகத்துக்காகவும் செய்த சேவைகள் இன்றும் போற்றப்பட்டு வருகின்றன. அவர் எம்மை விட்டுச் சென்றாலும் அவரது அரசியல் பாசறையில் வளர்ந்த நாங்கள் அதனை அடிச்சுவடாகக்கொண்டு செயலாற்றி வருகின்றோம்.

முஸ்லிம்களது அரசியல் உரிமைகளும்  இருப்பிடமும் முக்கியமே தவிர, தன்னுடைய சொந்த நலன்கள் அல்ல எனத் தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். சமூகப் பிரச்சினைகள் வரும்போதுகூட தன்னுடைய அமைச்சுப் பதவிகளை த் தூக்கியெறிந்து ஆட்சியாளர்களுக்கு சவால்விட்டு முஸ்லிம் சமூகத்துக்கு பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் அவரே.
குறிப்பாக,  பெரும்பான்மைக் கட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து எவருமே பேசாத சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவதாக எதிர்கொண்ட 1987ஆம் ஆண்டு உள்ளூராட்ச்சித் தேர்தலில முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் களத்தில் குதித்தது. அப்போது, தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த என்னிடம் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை அவர் ஒப்படைத்தார். தலைவர் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்தார்.

கட்சியை ஆரம்பித்த நாள்முதல்  முதலாவது தேர்தல் தொடக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாபெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சியடைவதற்கு தலைவர் அஷ்ரப் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளின் போதும் அவருக்குப் பக்கபலமாக நானும் இருந்தேன். முஸ்லிம்களுக்கான ஒருகட்சியை தலைவர் அஷ்ரப்புடன் இணைந்து வளர்த்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

அவர் எப்போதுமே முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பிலுமே அதிக கவனம் செலுத்தினார்.  ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுடன் முஸ்லிம் சமூகம் கைகோத்திருப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டார். அதனை அவர் பல சந்தர்பங்களில் சாதித்தும் காட்டியிருந்தார்.

நாட்டின் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் அரசுக்கு எதிர்ப்புச் சக்தியாக இருப்பார்களாயின் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்தகால அரசியல் போக்கை வைத்து நிகழ்கால அரசியலுக்கான திட்டங்களை வகுப்பதில் அவரைப் போன்ற சிறந்த முஸ்லிம் தலைவர் எவருமே இருக்கமுடியாது.

அரசைப் பகைத்துக்கொண்டு தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என தலைவர் அஷ்ரப் கூறிய விடயம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு தற்போதுதான்  புரிய ஆரம்பித்துள்ளது. ஆகவே, தலைவருடன் நெருக்கமாக இருந்தவன்  கட்சியை வளர்த்தவன் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கட்சித் தலைவர் காட்டிய வழிமுறையைப் பின்பற்றி செயலாற்ற வேண்டும்.

வடக்கு  கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது  இணைந்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களுடைய எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காக வடக்கு  கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் அல்லது கிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனி மாகாணசபை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்தார்கள். 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோஷமாக இதுவே முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.

2012ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு 2000ஆம் ஆண்டிலே திட்டமிட்டவர் அஷ்ரப் அவர்கள். நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக வளர்ச்சி கண்டு அதனூடாக அரசில் பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம்களின் அரசியல் பயணத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்குடனேயே தேசிய ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து 2012ஆம் ஆண்டு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது  எங்கெங்கு ஆசனங்களை வெல்வது என்பவை தொடர்பில் இரவு பகலாக தலைவர் அஷ்ரப் அவர்கள் திட்டமிட்டார்கள்.

அவரது இந்த நடவடிக்கைகள் அத்தனைக்கும் நாங்கள் பக்கபலமாகவே இருந்தோம். அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவை வழங்கி வரவேற்றோம். எனினும், அவரது மறைவைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் கட்சி பிளவடைந்தது. இதனால் தலைவர் அஷ்ரப்பின் எதிர்பார்பு  இலக்கு என்பவற்றை எம்மால் அடையமுடியவில்லை. இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. தலைவரின் கனவு  சிந்தனைகள் பிரதிபலிக்கப்பட வேண்டுமாயின் நாங்கள் எங்களுக்கிடையில் உள்ள பிளவுகளை மறந்து எல்லோரும் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டும். அவ்வாறான நிலை ஏற்படும்போது மாத்திரமே மீண்டும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தை எம்மால் ஆரம்பித்து தலைவரின் கனவை நனவாக்க முடியும்.

தலைவர் அவர்களின் இலட்சியங்களில் ஒன்றான தென் கிழக்கு பல்கலைக்கழகம் இன்று மிகச் சிறப்பாக 3ஆயிரம் மாணவர்களை உள்வாங்கி கல்விப் பணியாற்றி வருகின்றது. அவர் எம்மனங்களில் விதைத்த சிந்தனைகள்  ஊட்டித்தந்த அரசியல் பாடங்களே இன்றும் எங்களை அரசியலில் ஈடுபடுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்ற, சமூகப்பிரச்சினைகள் வரும்போது சமூகத்துக்காக பேசக்கூடிய தைரியத்தையும்  உணர்வையும் எம்மத்தியில் ஏற்படுத்தியவரும் தலைவர் அஷ்ரப் அவர்களே.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களுடைய நல்ல அமல்களை அங்கீகரித்து உயர்தரமான சுவர்க்கத்தை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு, அவரது கனவுகளையும்  இலட்சியங்களையும் எதிர்காலத்தில் நிறைவேற்றக்கூடிய சமூகமாக மாறுவோமாக!! ஆமீன்!!
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு
தலைவர், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்

Related posts

ஹிஸ்புல்லாஹ்வுக்கு மணி மகுடம் சூட்டி கௌரவிப்பு

wpengine

மதுபான தொழிற்சாலை! வாழைச்சேனை பிரதேச சபை வழக்கு தாக்கல் செய்யதா? அமீர் அலி கேள்வி

wpengine

வங்கி கணக்கின் ஊடாக பல ரூபா நிதி மோசடி

wpengine