அனுராதபுரத்தில் சில பிரதேச சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஆசனங்களை வென்றெடுக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் அதிகம் சிங்கள சகோதரர்கள் வாழுகின்ற அனுராதபுரத்தில் எட்டு உள்ளூராட்சி மன்றங்களில் தனித்தும் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் ஐ.தே.க வுடன் இணைந்தும் மொத்தமாக 10 உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடுகின்ற வேற்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் அனுராதபுரம்,கனேவல்பொல கிராமத்தில் முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ராவுத்தர் நெய்னா முஹம்மதின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம ஆதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
உள்ளுராட்சி சபைகளின் மூலம் செய்யக்கூடிய பல்வேறு அபிவிருத்திகளை நோக்காக கொண்டு நாம் இந்த தேர்தலில் இறங்கியுள்ளோம், நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சினைகள், கல்வி தொடர்பான பிரச்சினைகள், பாடசாலைக்கான வளப்பங்கீடுகளை வழங்குதல் தொடர்பிலான பிரச்சினை என கிராமங்கள் முழுவதும் நிறைய பிச்சினைகளும்,தேவைப்பாடுகளும் இருக்கின்றன அவற்றை நிவர்த்தி செய்யவும் அதன் மூலம் செழிப்பான கிராமங்களை உருவாக்கவும் எமக்கான பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைகளுக்கு செல்லவேண்டும்.
இந்த தேர்தல் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு கட்சிகளின் செல்வாக்கிலும் பார்க்க தனிநபர்களின் செல்வாக்கும் நன்னடத்தையும் தொடர்பிலான சான்றுகூறும் வகையில் அமைந்துள்ளது எனலாம். எனவே வடக்கிலும்,கிழக்கிலும் வடகிழக்குக்கு அப்பாலும் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிளைகள் வியாபித்து காலூன்றும் எனும் திடமான நம்பிக்கை எம்மிடம் உள்ளது. எமது சக்தியும் பலமும் என்ன என்பது தொடர்பில் ஐ.தே.கட்சிக்கு நன்றாக தெரியும் அதனால் தான் அம்பாறையில் எல்லா சபைகளிலும் எங்கள் பட்டியலில் அவர்கள் போட்டியிடுகிறார்கள். இது ஒரு பலமான கட்சியோடு கூட்டிணைந்து எமது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் அரசியல் வியூகமாகும்.
அத்தோடு மத்தியில் ஆளுகின்ற கட்சியோடு நாம் ஏற்படுத்திக்கொள்கின்ற கூட்டமைப்பானது அபிவிருத்தி தொடர்பில் விரிவான செயற்பாட்டை எதிர் காலத்தில் முன்னெடுக்க பலவழிகளிலும் எமக்கு உதவி செய்யும். இதுவரைக்கும் பல அபிவிருத்திப்பணிகளை நாம் செய்துள்ளோம் இந்த அபிவிருத்திப்பணிகளை இன்னும் பலத்தோடு செய்ய முடியும்.
திருகோணமலை மாவட்டத்தில் ஏழு உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுகிறோம், இதில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. அவ்வாறே அம்பாறை மாவட்டத்தில் நாம் குறைந்தது ஆறு உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிகொள்ளும் வாய்ப்பு எமக்கு இருக்கிறது. இதே சாதகமான நிலை புத்தளத்திலும் இன்னும் சில மாவட்டங்களிலும் இருக்கின்றது. இங்கு அனுராதபுரத்தில் நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் தேவைப்பாடு எமக்கு இல்லை மாறாக புதிய தேர்தல் முறையினை பயன்படுத்தி நாம் போட்டியிடுகின்ற சபைகளில் ஒரு சில உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.நாம் பெருக்கின்ற அந்த ஆசனங்கள் அவ்வப்பிரதேச சபைகளிளினதும் ஆட்சியை தீர்மானிக்கும் கருவியாகக் கூட அமைந்துவிடும் சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன.