இங்கிலாந்தில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி அசத்தியது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடினர். 10-வது ஓவரின் போது மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதம் கடந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து முன்னேறிய ஷிகர் தவான் 68 ஓட்டகளில் ஆட்டமிழந்தார். தொடக்க ஜோடி 136 ஓட்டங்கள் குவித்தது. அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் இணைந்த தலைவர் கோலி, நிதானமாக விளையாடினார்.
34-வது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 173 ஆக இருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டு ஆடுகளம் மூடப்பட்டது. ரோகித் சர்மா 77 ஓட்டங்களுடனும், கோலி 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் மழை விட்டதும் போட்டி தொடங்கியது. அப்போது போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விராட் கோலியுடன் யுவராஜ் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் அணியின் ஓட்டங்களும் விறுவிறுவென உயர்ந்தது.
யுவராஜ் சிங் 32 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தான் பந்துவீச்சை விளாசினார். கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்கள் குவித்தது.
கோலி 81 ஓட்டங்களுடனும், பாண்ட்யா 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஷதாப் கான் ஆகியோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, டக் வர்த் லுவிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 324 ஓட்டங்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலி, ஷேக்ஷாத் துடுப்பெடுத்தாடினர்.
ஆட்டத்தில் ஐந்தாவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் மீண்டும் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு பின்னர் போட்டி தொடங்கியது. அப்போது, 41 ஓவர்களில் 289 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 9வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஷேக்ஷாத் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி மட்டுமே 50 ஓட்டங்கள் அடித்து ஜடேஜா பந்தில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சில பிடிகளை இந்திய வீரர்கள் தவற விட்டாலும், பாகிஸ்தான் வீரர்களை ஓட்டம் எடுக்க விடாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஹபீஸ் மற்றும் மாலிக் சிறிது நேரம் நின்று சமாளித்தனர். ஆனால், அவர்களையும் ஜடேஜா வெளியேற்றினார். கடைநிலை வீரர்களை ஹர்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் வெளியேற்ற இந்தியாவின் வெற்றி உறுதியானது.
35வது ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் டக் வர்த் லுவிஸ் விதிமுறைகளின் படி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் உமேஷ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.