அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாது தொடர்ந்தும் அசாதாரண நிலை நீடித்து வருகின்றது. வெள்ளம் வடிந்து சென்றுள்ளபோதிலும் அங்கு சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அனர்த்தத்தில் சிக்குண்ட பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 203 ஆக பதிவாகியுள்ளதுடன் காணாமல் போன 95 பேரை தேடும் பணிகளும் பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 61 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 46 ஆயிரத்து 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இறுதி வாரத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 203 ஆக பதிவாகப்பட்டுள்ளதுடன் இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. காணமால் போனோரின் எண்ணிக்கையும் 95 ஆக உள்ளது. காணமால் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
14 மாவட்டங்களில் இந்த தாக்கம் ஏற்பட்டநிலையில் பெரும்பாலான பகுதிகள் ஓரளவு சாதாரண நிலைமைக்கு வந்துள்ளன. எனினும் இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் இப் பிரதேசங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற பகுதியாகவே கருதப்பட்டுவருகின்றது. களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் மலையகத்தில் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி
இரத்தினபுரி மாவட்டத்தின் களுகங்கையை அண்மித்த பகுதியில் வெள்ளம் குறைவடைந்துள்ள போதும் கிரியெல்ல, அயகம போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடிந்தோடது தேங்கியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் 37 ஆயிரத்து 458 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 45 ஆயிரத்து 247 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், இதுவரையிலும் 11ஆயிரத்து 173 குடும்பங்களை சேர்ந்த 44ஆயிரத்து 684 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டடம் அதிக உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் 84 பேரின் சடலங்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளது. காணமால் போயுள்ளதாக கருதப்படும் மேலும் 29 பேரை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரத்தினபுரி மாவட்டதின் நிவித்திகல, கலவான போன்ற பகுதிகளில் பாரிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அப்பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 859 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 பேரின் சடலங்களை மீட்டுள்ள நிலையில் 52 பேரை தொடர்ந்தும் தேடி வருகின்றனர். 3399 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 689 நபர்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெல்ல நீர் வடிந்தோடியுள்ள நிலையில் சில பகுதிகளில் நீர் மட்டம் ஐந்து அடி அளவில் தேங்கி நிற்கின்றது.
மாத்தறை
மாத்தறை மாவட்டத்தின் நிலைமைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் துப்புரவு பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திய மாவட்டமாக அடையாளபடுத்தப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 864 குடும்பங்களை சேர்ந்த 1 இலட்சத்து 82 ஆயிரத்து 711 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல்போயுள்ளனர். காணமல் போனவர்களை தேடும் பணிகளில் முப்படையினரும் நிர்வாகிகளும் செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களில் 2910 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 277 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் எனவும் தொடர்ந்தும் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.