(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது )
கடந்த 28.05.2017 ஞாயிறு பிற்பகல் மூதூர், பெரியவெளி கிராமத்தை சேர்ந்த ஆரம்ப பள்ளி மாணவிகள் மூன்று பேர்களை தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர்கள் வண்புணர்வுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டுபிடித்து அவர்கள் மீது பழிசுமத்தாமல், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரமானது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
குற்றவாளிகள் அனைத்து தரப்பிலும் இருக்கின்றார்கள். அதில் இனம், மதம், மொழி, ஜாதி, நிறம், பிரதேசம் என்ற எந்த வேறுபாடுகளும் கிடையாது. அத்துடன் உலகில் எந்தவொரு சமூகத்தையோ குறிப்பிட்டு, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்று யாராலும் உத்தரவாதம் வழங்கவும் முடியாது.
அப்படித்தான் உத்தரவாதம் வளங்க முடியுமென்றால் நீதி மன்றங்களோ, பொலிஸ் நிலையங்களோ அவசியமில்லை. குற்றச் செயல்களை தடுத்து சட்டத்தினை நிலை நாட்டுவதற்கே பொலிஸ், நீதிமன்றங்கள் உலகின் அனைத்து பிரதேசங்களிலும் நிறுவப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால் அனைத்து இடங்களிலும் குற்றம் செய்யக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்!
மூதூரின் பெரியவெளி கிராமத்து தமிழ் மாணவிகள் விடயத்தில், உண்மை நிலையினை கண்டறிந்து குற்றவாளிகள் மீது விரலை நீட்டாமல், எடுத்த எடுப்பிலேயே “முஸ்லிம் காடையர்கள் தமிழ் மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்கள்” என்ற பொறுப்பற்ற முறையிலான பிரச்சாரமானது அரசியல் நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகின்றது.
அதாவது அமைதியான முறையில் ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களை பகமையாக்கி மீண்டும் கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தினை தூண்டுவதன் மூலம், அதில் அரசியல் குளிர் காய்வதற்கு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றதா?
அத்துடன் தமிழ் மாணவிகள் முஸ்லிம் காடையர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியதுடன், கிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரித்துள்ளார்கள் என்ற பிரச்சாரத்தினையும் இதனுடன் சேர்த்துள்ளார்கள்.
தமிழ் மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால் குற்றவாளிகளை இனம்கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பது பற்றி சிந்திக்காமல், காணி விவகாரத்தினை இதனுடன் முடிச்சுப்போட்டது ஏன்?
கிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை இவ்வளவு காலமும் ஏன் கூறவில்லை? கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வருவதுடன், இரு கட்சிகளும் சேர்ந்தே கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்கின்றது.
தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் இந்த இரண்டு அரசியல் கட்சிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் பிரச்சினைக்கு ஏன் தீர்வுக்கான முன்வரவில்லை?
எனவேதான் 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தினை தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்த சில தீயசக்திகள் மீண்டும் அதே நிலைமையினை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் தமிழ் பேசும் இரண்டு சிறுபான்மை சமூகத்தினர்களும் அவதானமாக இருப்பதுடன், மாணவிகள் மீது பலாத்காரம் மேற்கொண்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.